காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, மிலாது நபி, குடியரசு தினம் போன்ற நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு முந்தைய தினம் அதிக அளவில் மதுவிற்பனை என்பது நடைபெறுகிறது.
அந்த வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு நேற்று விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஜனவரி 25-ம் தேதி ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
மதுபிரியர்களின் படையெடுப்பால் அன்று ஒரே நாளில் ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.5 கோடியே 43 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் போது ‘டாஸ்மாக்’ கடைகளில் ரூ.839 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில் தற்போது ஒரே நாளில் ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு விற்பனை ஆகியுள்ளது. ஒரு புறம் மதுநாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுகிறது. மறுபுறம் மதுவிற்பனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கக்கூடிய செய்தியாகவே உள்ளது.
