குடியரசு தினவிழா, சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு, ட்ரோன்கள் பறக்க தடை  – Kumudam

Spread the love

வருகிற 26 திங்கட்கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை, காமராஜர் சாலை- வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

 மொத்தம் 7,500 போலீசார் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும், சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட  சென்னை விமான நிலையம், இரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நகரின் முக்கிய நுழைவு பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான மீனம்பாக்கம் விமான நிலையம்,  சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம் பேருந்து முனையங்கள் உட்பட அனைத்து முக்கிய இடங்களிலும், சென்னை பாதுகாப்பு பிரிவின், காவல் அதிகாரிகள் தலைமையில், காவல் ஆளிநர்கள், வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழத்தல் பிரிவு, மோப்பநாய் பிரிவு மற்றும் மெரினா கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படை பிரிவினருடன் இணைந்து  நாசவேலை தடுப்பு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும்,  குடியரசு தினத்தை முன்னிட்டு 25.01.2026 மற்றும் 26.01.2026 ஆகிய 2 நாட்கள் (அரசு விழாக்கள் தவிர மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ராஜ்பவன் முதல் மெரினா கடற்கரை வரை மற்றும் தமிழக முதல்வர் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரையில் செல்லும் வழித்தடங்கள் ‘‘சிவப்பு மண்டலமாக‘‘ (RED ZONE) அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகளில் Remotely Piloted Aircraft Systems (RPAS), டிரோன் மற்றும் எந்தவிதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி பொருட்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகின்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *