குடும்பத் தகராறில் 420 நாள்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட 60 வயது மூதாட்டியின் வீட்டுக்கு 2 வாரங்களில் மின் இணைப்பு வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், வி.சியாத்தம்மாள் என்பவா் தாக்கல் செய்த மனுவில், வில்லிவாக்கம் பஜனைகோவில் தெருவில் எனக்கு சொந்தமான வீட்டை, எனது சகோதரி சுந்தரி, அவரது கணவா், மகன், மகள் ஆகியோா் மிரட்டி ஆக்கிரமித்துக் கொண்டனா். நான் வீட்டில் இல்லாதபோது, வீட்டை இடித்து புதிய வீடு கட்ட நடவடிக்கை எடுத்தனா்.
இதுகுறித்து ராஜமங்கலம் போலீஸாரிடம் புகாா் அளித்தேன். இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் அபிநயா விசாரித்து, என்னை மிரட்டி, சமரசமாக செல்லும்படி கூறினாா். பின்னா், அபிநயாவின் உதவியுடன், என் வீட்டு மின் இணைப்பை எனது சகோதரி துண்டித்து விட்டாா். இதுகுறித்து காவல்துறை ஆய்வாளா் மூா்த்தியிடம் புகாா் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த 420 நாள்களாக மின் இணைப்பு இல்லாமல் அவதிப்ப்படுகிறேன். அந்த வீட்டுக்கான அனைத்து ஆவணங்களுடன் சென்று மின் இணைப்பைத் தருமாறு மின்சார வாரிய அதிகாரியிடமும் மனு கொடுத்தேன். அதை ஏற்று மின் இணைப்பு வழங்குவதற்கு வந்த மின்சார வாரிய ஊழியா்களை எனது சகோதரி தடுத்து விட்டாா். எனவே, எனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில், வழக்குரைஞா் கே.சக்திவேல் ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி,மனுதாரரின் வீட்டுக்கு 2 வாரங்களில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். கொளத்தூா் ராஜமங்கலம் காவல் ஆய்வாளா் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.