அடுத்து, புற்றுநோய் பாதித்த உங்கள் உறவினரின் வயதைப் பாருங்கள். வயதான பிறகு பாதித்ததா அல்லது 50 வயதுக்கு முன்பே பாதித்ததா என்று பாருங்கள். மார்பகப் புற்றுநோய் என்பதால், அது ஒரு மார்பகத்தை மட்டும் பாதித்ததா அல்லது இரண்டு மார்பகங்களையுமா என்றும் பாருங்கள். புற்றுநோய் பாதிப்புக்குள்ளான அதே நபருக்கு வேறு புற்றுநோய் பின்னணி ஏதேனும் இருந்ததா என்றும் தெரிந்துகொள்ளுங்கள். உதாரணத்துக்கு, மார்பகப் புற்றுநோய் தவிர்த்து, சினைப்பைப் புற்றுநோய் இருந்ததா என்றும் பாருங்கள்.
குடும்பப் பின்னணியில் நெருங்கிய உறவுகளுக்கு புற்றுநோய் இருந்திருந்தால், அது குறித்த பயம் மற்ற உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியம். அதற்காக மரண பீதி கொள்ளத் தேவையில்லை. யாருக்கேனும் இப்படிப் புற்றுநோய் வந்திருந்தால், ஜெனடிக் கவுன்சலிங் மேற்கொள்ள வேண்டியது அவசியம். பிஆர்சிஏ (BRCA) எனப்படும் டெஸ்ட் தேவைப்படலாம். ஜெனடிக் கவுன்சலிங் போகும்போதே, இந்த டெஸ்ட் உங்களுக்கு அவசியமா என்பதைச் சொல்லிவிடுவார்கள். இந்த டெஸ்ட்டின் அடிப்படையில், உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் சினைப்பைப் புற்றுநோய்க்கான ரிஸ்க் இருப்பதைத் தெரிந்துகொண்டு, முன்கூட்டியே அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளைச் செய்துகொள்ள முடியும்.

அதாவது, புற்றுநோய் ஆபத்து இருப்பது உறுதியானால், முன்கூட்டியே அறுவை சிகிச்சை (Prophylactic oophorectomy) செய்துகொள்ள முடியும். இதற்கடுத்து, மார்பகங்களை சுய பரிசோதனை செய்து பார்ப்பது எல்லாப் பெண்களும் அவசியம் பின்பற்ற வேண்டிய விஷயம். கண்ணாடி முன் நின்றுகொண்டு, மாதம் ஒருமுறையோ, இருமுறையோ, உங்கள் மார்பகங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து பார்க்கலாம். இது குறித்த தகவல்களை உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
இதற்கடுத்து, கிளினிகல் பிரெஸ்ட் எக்ஸாமினேஷன்” (Clinical Breast Examination) என்பதும் முக்கியம். அதாவது 30 வயதுக்குப் பிறகு, வருடம் ஒருமுறையாவது மருத்துவரை அணுகி, மார்பகங்களைப் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்வதும் அவசியம். அடுத்தது, மேமோகிராம் பரிசோதனை. இது 40 ப்ளஸ் வயதில் உள்ள பெண்கள் அவசியம் செய்ய வேண்டியது. குடும்பப் பின்னணியில் மார்பகப் புற்றுநோய் இருந்தால், இன்னும் சீக்கிரமே இந்த டெஸ்ட்டை செய்து பார்க்கலாம். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, புகை, மதுப் பழக்கங்களை அறவே தவிர்ப்பது, உடற்பயிற்சியை தினசரி வழக்கமாக்குவது, சுய மருத்துவம் செய்வதைத் தவிர்ப்பது போன்றவை மிக முக்கியம். நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டியதும் அவசியம். ஆரோக்கியமான இந்தப் பழக்கங்கள் யாவும் புற்றுநோய் ரிஸ்க்கை குறைக்க உதவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.