குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களுக்கு தடை நீக்க கோரிய மனு : உயர்நீதிமன்றம் தள்ளுபடி  – Kumudam

Spread the love

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில், தன் அனுமதியில்லாமல், இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி’ ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘குட் பேட் அக்லி’ படத்தில்  இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்கக் கோரி  மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மனுத்தாக்கல் செய்திருந்தது. குட் பேட் அக்லி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களின் உரிமையை, சோனி நிறுவனத்திடம் இருந்து  பெற்று  பயன்படுத்தியதாகவும், தற்போது இளையராஜா பாடல்களை குட் பேட் அக்லி திரைப்படத்தில் இருந்து நீக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி என்.செந்தில்குமார் விசாரித்தார். இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில், திரைப்பட தயாரிப்பாளர்களிடமிருந்து பாடல் உரிமையை வாங்கியதாக கூறுகிறார்கள். பதிப்புரிமை  சட்டப்படி, இசையமைப்பாளர் களிடம் தான் பாடல் உரிமை உள்ளது. ஒட்டுமொத்த படத்திற்கு தயாரிப்பாளருக்கு உரிமை இருந்தாலும், பாடல்களை தனியாக எடுத்து மூன்றாம் நபருக்கு விற்க தயாரிப்பாளருக்கு உரிமை இல்லை என்றும் வாதிடப்பட்டது.

இந்தப் படத்தில் மூன்று பாடங்களை  உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது என இளையராஜா தரப்பில்  வாதிடப்பட்டது.பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், தயாரிப்பாளர்களிடம் தான் முழு உரிமை உள்ளது. இளையராஜாவிடம் இசை உரிமை இருந்தால் அதை அவர் தான் நிரூபிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அனைத்து வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, நீதிபதி செந்தில்குமார்,  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

இன்று இந்த மனு மீது உத்தரவிட்ட நீதிபதி செந்தில்குமார், பாடல்களை உருமாற்றம் செய்வதை தடுக்கவும், அனுமதி இன்றி பயன்படுத்துவதை தடுக்கவும் இளையராஜாவுக்கு உரிமை உள்ளது. அதனால் இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மேலும் பிரதான வழக்கின் விசாரணையை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *