நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில், தன் அனுமதியில்லாமல், ‘இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி’ ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த தடையை நீக்கக் கோரி ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களின் உரிமையை, சோனி நிறுவனத்திடம் இருந்து பெற்று பயன்படுத்தியதாகவும், தற்போது இளையராஜா பாடல்களை திரைப்படத்தில் இருந்து நீக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த மாட்டோம் என மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதி அளித்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
