ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து அக்னி தீர்த்த கடற்கரைக்கு செல்லும் சன்னதி தெருவிலுள்ள சாலை உடைக்கப்பட்டு, புதிய சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதால், அவ்வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் கடும் அவதி அடைகின்றனர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமியை தரிசனம் செய்ய நாடு முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிய பின்னர், கோயிலுள்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி ராமநாத சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து அக்னி தீர்த்த கடற்கரைக்குச் செல்லும் பிரதான சாலையான சன்னதி சாலை, புதிய சாலை போடுவதற்காக முழுமையாக உடைக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டும் குழியுமாக சாலைக்கு அடி பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடிவதால் அவ்வழியாக வரக்கூடிய பக்தர்கள் மிகுந்த அவதியுற்று வருகின்றனர். வயதானவர்கள் தடுமாறி விழுந்து செல்லும் அவலநிலையும் உள்ளது.
அக்னி தீர்த்தக் கடற்கரை வரை மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக இயக்கப்படும் பேட்டரி வண்டிகளும் இயக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் சாமி தரிசனம் செய்ய வரும் வயதான பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். செருப்பு அணியாமல் செல்லும் பக்தர்களுக்கு காலில் இரத்த காயம் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சன்னதி சாலையை விரைந்து அமைக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.