சென்னை: தொழிற்பேட்டை பகுதியான மண்ணூர் பேட்டை சாலை குண்டும் குழியுமாகவும், சிக்னல் இல்லாததாலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். சென்னை – திருவள்ளூர் நெடுஞ்சாலை (எம்டிஹெச்.சாலை) மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு செல்லும் இணைப்புச் சாலைகள் இணையும் பகுதியில் மண்ணூர்பேட்டை சந்திப்பு அமைந்துள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மண்ணூர்பேட்டை வழியாகத் தான் தினந்தோறும் சென்று வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக மண்ணூர் பேட்டை சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
சாலையின் பெரும்பாலான பகுதிகள் பெயர்ந்து, பள்ளங்கள் நிறைந்திருக்கின்றன. ஜல்லி கற்கள் சாலையெங்கும் சிதறி கிடக்கின்றன. அதேபோல் முறையான சிக்னல் மற்றும் யூ-டர்ன் வசதி இல்லாததால் அருகே உள்ள பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் எம்டிஹெச் சாலையில் அங்குமிங்குமாக குறுக்கே புகுந்து சென்று வருகின்றன. இதன் விளைவாக தினசரி போக்குவரத்து நெரிசல் என்பது சகஜமாகி, மக்கள் அலைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுதொடர்பாக அம்பத்தூர் பகுதியை சேர்ந்த வாகன ஓட்டி மணிகண்டன் என்பவர் கூறுகையில், தினமும் அலுவலக நேரங்களில் மண்ணூர்பேட்டையை கடந்து செல்ல 30 நிமிடங்களாகிறது. மழை நேரத்தில் மழைநீர் தேங்குவதால் பள்ளங்கள் தெரியாமல் குழிகளில் வாகனங்களை இயக்குவதால் சேதமடைகின்றன.
முகப்பேர், கோல்டன் காலனி, சத்யா நகர் செல்வதற்காக வரும் வாகனங்கள் முறையான சிக்னல் இல்லாததால், அவர்கள் விருப்பத்துக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. எனவே மண்ணூர் பேட்டையில் சாலைகளை பழுதுபார்க்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க முறையான சிக்னல் வசதி அல்லது யூ-டர்ன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.