குத்தகை விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்யலாம்: தமிழக அரசு உத்தரவு சொல்வது என்ன? | Tenant Farmers also Get Crop Insurance: TN Govt Order

Spread the love

குறுவை சாகுபடியில் நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்யலாம் என்ற நிலையை மாற்றி, குத்தகைதாரர்களும் பயிர்க் காப்பீடு செய்ய தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

விவசாயிகள் சாகுபடி செய்யும்போது, எதிர்பாராத மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால், அதில் இருந்து விவசாயிகளை பாதுகாத்துக் கொள்ள பயிர்க் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புத் தொகை, விவசாயிகளின் பிரீமியத் தொகையை கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் குறுவை (காரீப்), சம்பா (ராஃபி) பருவத்தில் பயிர்க் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், குறுவை பருவத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் ஜூலை 31-ம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்க் காப்பீடு செய்ய ஷீமா பொது காப்பீடு நிறுவனமும், அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனமும் விவசாயிகளிடம் இருந்து காப்பீடு பிரீமியத் தொகையை பெற்று வருகின்றன. ஏக்கருக்கு ரூ.752 பிரீமியத்தை பொது சேவை மையங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் செலுத்தி வருகின்றனர்.

ஆனால், நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்ய முடிகிறது. குத்தகை விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.38 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நிலையில், 179 விவசாயிகள் மட்டுமே, 110 ஏக்கருக்கு பயிர்க் காப்பீடு செய்திருந்தனர். இதையடுத்து, தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பழைய படி குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.ஜெகதீசன் கூறியது: குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்ய ஜூலை 31-ம் தேதி கடைசி நாளாகும். பல பகுதிகளில் தற்போதுதான் நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, பயிர்க் காப்பீடு செய்ய காலக்கெடுவை நீட்டித்து தர வேண்டும். டெல்டா மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சத்திர நிர்வாகம் மற்றும் கோயில், ஆதீனத்துக்கு சொந்தமான இடங்களில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முன்பு பயிர்க் காப்பீடு செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளதால், விவசாயிகள் இனிமேல் வருவாய்த் துறையினரிடம் சான்று பெற்று காப்பீடு செய்ய காலதாமதம் ஆகும். எனவே, காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றார்.

இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறுகையில், “மத்திய அரசின் நில உடமையாளர்களின் பதிவேடுகளின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட இணையதளமும், காப்பீடுக்கான இணைய தளமும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால் நில உரிமையாளர்களின் பெயர்கள் இருந்தால் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் குத்தகை சாகுபடியாளர்கள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த முடியவில்லை. இந்த தகவலை மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது தமிழக அரசு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதால், குத்தகை சாகுபடி செய்பவர்களும் காப்பீடு செய்யலாம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *