நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அருவியே அடையாளம் தெரியாத வகையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இரு வாரத்துக்கு முன்பு அவ்வப்போது வெயில் அடித்து வந்த நிலையில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சுழல் நிலவி வருகிறது. அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 46 மிமீ., பேச்சிப்பாறையில் 45 மிமீ., மழை பெய்தது. திற்பரப்பில் 41, புத்தன் அணையில் 40, தக்கலையில் 38, சுருளோட்டில் 35 மிமீ., மழை பதிவானது.
மழையால் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. பேச்சிப்பாறை நீர்மட்டம் 44.79 அடியாக உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்தாக 1080 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 432 கனஅடி நீர் மதகு வழியாகவும், உபரியாக 532 கனஅடியும் வெளியேறி வருகிறது. இதைப்போல் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.52 அடியாக உள்ள நிலையில் 941 கனஅடி தண்ணீர் நீர்வரத்தாக உள்ளது. அணையில் இருந்து 460 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 14.69 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 199 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.
அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை, சிற்றாறில் இருந்து வெளியேறும் தண்ணீரால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது. அருவி அடையாளம் தெரியாத வகையில் தண்ணீர் ஆர்ப்பரிப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று மீண்டும் தடை விதிக்கப்பட்டது.