குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டியது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று இரவில் இருந்து விடிய விடிய பரவலாக மழை பெய்தது. குறிப்பாக திற்பரப்பு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு மற்றும் மலையோர பகுதிகளில் கனமழை கொட்டியது.
அதிகபட்சமாக சிற்றாறு ஒன்றில் 55 மிமீ., மழை பதிவானது. பெருஞ்சாணியில் 47 மிமீ., சிவலோகத்தில் 46, திற்பரப்பில் 48, புத்தன்அணையில் 42, பேச்சிப்பாறையில் 41, களியலில் 40 மிமீ., மழை பெய்தது. மழையால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று 42 அடியாக உயர்ந்தது. அணைக்கு 874 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. அணையில் இருந்து 477 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.50 அடியாக உயர்ந்துள்ள நிலையில் அணைக்கு 745 கனஅடி தண்ணீர் வருகிறது. சிற்றாறு ஒன்றில் 6.72 அடியும், சிற்றாறு இரண்டில் 6.82 அடியும் தண்ணீர் உள்ளது.
மழையால் இன்று குமரி மாவட்டத்தில் மீன்பிடி பணிகள் பாதிக்கப்பட்டன. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதைப்போல் தென்னை சார்ந்த தொழில், உப்பளம், செங்கல் சூளை, ரப்பர் பால்வெட்டுதல் உட்பட அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டன. மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க இன்று காலையில் இருந்து தடை விதிக்கப்பட்டது.
இன்றும் தமிழகத்தில் விடுமுறை விடப்பட்டிருந்ததால் கன்னியாகுமரியில் மழைக்கு மத்தியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் மழையால் பிற இடங்களுக்கு செல்லாமல் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலம் ஆகியவற்றிற்கு படகு பயணம் செய்ய ஆர்வம் காட்டினர். இதனால் கன்னியாகுமரியில் படகு இல்லத்தில் மட்டும் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் நின்றிருந்தனர்.