குமரி அனந்தன்: தமிழைப் போற்றி வளர்த்த மக்கள் அரசியல் தலைவர்! | Who is Kumari Ananthan? The congress veteran who stood for Tamil and Tamilnadu Politics

1357480.jpg
Spread the love

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. குமரி அனந்தன் தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும், தமிழக அரசியலுக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம் இது…

கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19-ஆம் தேதியன்று பிறந்தவர்.

பெருந்தலைவர் காமராஜரின் அருமந்த சீடராக விளங்கியவர். காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர். ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று களக்காட்டிலிருந்து ராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டதன் விளைவாக 15.08.1984 அன்று 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் பெற்றுத் தந்தவர்.

இலக்கியச் செல்வராகவும், மேடைப் பேச்சாளராகவும் எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாக திகழ்ந்தவர். 1977-ம் ஆண்டு நாகர்கோயில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளிலிருந்து தமிழில் பேசுவதற்குப் பலமுறை அவையில் போராடி, பத்து முறைக்கு மேல் தொடர்ந்து காவலர்களால் வெளியேற்றப்பட்டு, சோர்ந்துவிடாமல் அவரின் தொடர் முயற்சியால் 20.11.1978 இல் தமிழில் பேசுவதற்கு அனுமதி கிடைத்து, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தமிழிலேயே பேசியவர். இதுகுறித்து மறைந்த முதல்வர் கருணாநிதி, “தனிமரம் தோப்பாகாது” என்ற பழமொழியை மாற்றி அமைத்து விட்டார் என்ற பாராட்டினைப் பெற்றவர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுப்பினராக 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழகத்தில் பனைவளம் பெருக முழங்கியவர். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசின் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்.

தமிழகத்தில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தியவர். தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றவர். செங்கோட்டையில் வீரவாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்தவர். எட்டயபுரம் கூட்டுறவு நூற்பாலைக்கு பாரதியார் பெயரிட உண்ணா நோன்பிருந்து கோரிக்கையில் வெற்றி பெற்றவர்.

பைகிராப்ட்ஸ் ரோடு என்று பெயர் கொண்டிருந்த சாலைக்கு பாரதி சாலை எனப் பெயர்வர முனைந்து வென்றவர். வானொலி என்பதை ஆகாஷ்வாணி என்றாக்க முனைந்தபோது எதிர்த்து சென்னையில் பேரணியும் சாத்தூர் வைப்பாற்று மணல் வெளியில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்; தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோரை அழைத்து பெரிய மாநாடு நடத்தி வானொலி தொடர்ந்து நிலைக்க வழி வகுத்தவர்.

நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட போது POST- CARD; MONEY ORDER FORM என்பனவற்றைத் தமிழில் அஞ்சலட்டை, பணவிடைத்தாள் என்று தமிழில் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நிறைவேற்றி CHEQUE என்பது காசோலை என அழைக்கவும், தந்தியை விரைவு வரைவு என அழைத்துச் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர்.

நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார், சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன், பார் அதிரப் பாடிய பாரதி உட்பட 29 நூல்களை எழுதியவர்.

சென்னையில் உள்ள பெரும்பான்மை கல்லூரிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் சென்று சொற்பொழிவாற்றியதோடு, மாணவ, மாணவிகளுக்கும் இக்கலையில் பயிற்சி அளித்ததோடு, மாணவர்களை மேடைகளில் பேச ஆக்கமும், ஊக்கமும் அளித்த சிறப்பிக்குரியவர்.

‘சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா’ என்ற பாரதியின் வாக்கை செயல்படுத்தியவர் என போற்றி, தமிழ் மக்கள் மனதில் தனக்கெனத் தனியிடம் பெற்ற, இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு 2024 சுதந்திர தின விழாவில் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

17441698312027

மகள் தமிழிசை உருக்கம்: தன்னுடைய தந்தை குமரி அனந்தன் மறைவு குறித்து உருக்கமான பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை… தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் இன்று என் அம்மாவோடு இரண்டற கலந்து விட்டார்.

குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு. தமிழிசை என்ற பெயர் வைத்து, ‘இசை இசை’ என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் இன்று காற்றில் இசையோடு கலந்து விட்டது.

வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சீரான வாழ்க்கை வாழ்ந்தவர். இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம் சீராக வாழ்வதைக் கண்டு பெருமைப்பட்டு வாழ்த்திவிட்டு எங்களை விட்டு மறைந்திருக்கிறார். என்றும் அவர் பெயர் நிலைத்திருக்கும் தமிழக அரசியலில். நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர். இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்.

17441698782027

மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா. நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ. அதை மனதில் கொண்டு உங்கள் பெயரில். நாங்கள் செய்வோம் என்று உறுதியோடு உங்களை வழி அனுப்புகிறோம்.

உங்கள் வழியில் நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல. நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும் என்று உங்கள் ஆசையை எப்போதும் நிறைவேற்றுவோம். போய் வாருங்கள் அப்பா. தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை, தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன். நன்றி அப்பா. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க>> காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *