கன்னியாகுமரி மாவட்டம் கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட களியலை சுற்றி மூன்று கல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. குவாரிகளில் அதிக அளவு பாறைகள் உடைக்கப்பட்டு, கிரஷர்கள் மூலம் ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு, பெருமளவில் கேரளாவுக்கு கொண்டுசெல்லப்பட்டு வந்துள்ளன. சக்திவாய்ந்த வெடிபொருட்களை பயன்படுத்தி பாறைகளை உடைப்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கல் குவாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், பல வருடங்களாக குவாரிகள் தொடர்ந்து செயல்பட்டுவந்த நிலையில், நாகராஜன் கலெக்டராக இருந்த சமயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக அந்த மூன்று குவாரிகளின் செயல்பாடுகளும் முடக்கப்பட்டன.

அந்த குவாரிகள் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த நிலையில் கட்டசல் பகுதியிலுள்ள கல் குவாரி அனுமதி இல்லாமல் கடந்த சில மாதங்களாக ரகசியமாக செயல்பட்டு வந்துள்ளது. குண்டுகற்களை உடைத்து கிரஷர் மூலம் ஜல்லி, எம் சாண்ட் ஆகியவை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். முறையான பாஸ் இல்லாமல் பாறை கனிமவள பொருட்கள் கேரளாவிற்கும் கடத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து கன்னியாகுமரி எஸ்.பி டாக்டர் ஸ்டாலினுக்கு சில புகார்கள் சென்றுள்ளன. இதையடுத்து எஸ்.பி ஸ்டாலின் நேற்று முன்தினம் நள்ளிரவு குவாரியில் அதிரடியாக ஆய்வு செய்தார். ஆய்வில் விதிமீறல் நடந்துள்ளதாக தெரியவந்தது. இதை தொடர்ந்து குவாரி மேலாளரான கடையாலுமூட்டைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஸ்டாலினை கடையாலுமூடு காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கல்குவாரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்ட கடையாலுமூடு காவல்நிலைய ரைட்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்படுள்ளனர். அனுமதி பெறாமல் ஓட்டப்படும் கல்குவாரிகளில் அவ்வப்போது ஆய்வுசெய்து அதிரடி நடவடிக்கை எடுக்கும் எஸ்.பி டாக்டர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.