குமரி திமுகவில் மல்லுகட்டு – கோதாவில் இறங்கிய மகேஷ், சுரேஷ் ராஜன் | Clash in Kanyakumari DMK

1379579
Spread the love

நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை தோற்கடித்து பாஜகவின் மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி வெற்றி பெற்றார்.

வரும் தேர்தலில் திமுகவில் மீண்டும் சீட் பெற முதல்வர் குடும்ப நண்பர் என்ற நெருக்கத்தில் சுரேஷ் ராஜன் காய்நகர்த்தி வருகிறார். அதேநேரம் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருக்கும் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ், தேர்தலில் சீட் பெற தீவிரம் காட்டி வருகிறார். அவர், தனது சொந்த தொகுதியான நாகர்கோவிலில் போட்டியிடும் வகையில் மாநகராட்சியின் 52 வார்டு பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

குமரி மாவட்டத்தில் சிட்டிங் அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் முதலில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் ரெமோனின் அதிவேக செயல்பாட்டால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாக தலைமைக்கு புகார்களை மேயர் மகேஷ், சுரேஷ் ராஜன் தரப்பினர்கொண்டு சென்றனர். இதனால் மனோ தங்கராஜின் பதவி பறிக்கப்பட்டது.

ஆனால், வரும் தேர்தலை மனதில் வைத்து அமைச்சர் இல்லாத மாவட்டமாக போய்விடக்கூடாது என்பதற்காக பால்வளத்துறையை ஒதுக்கி மீண்டும் மனோதங்கராஜை திமுக தலைமை மீண்டும் அமைச்சராக்கியது. குமரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் மனோ தங்கராஜுக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து பிரமித்துப்போன மேயர் மகேஷ், மாநகர தந்தையாக தான் பொறுப்பில் இருந்தாலும், அமைச்சர்தான் ஒரு மாவட்டத்தின் முக்கிய ஆளுமை. எனவே, அந்த பொறுப்பை பிடித்தே தீருவேன் என வெளிப்படையாகவே சொல்லி வருகிறார்.

அதற்கேற்ப முதல்வர் வெளிநாடு செல்லும் போது வழியனுப்புவது, கனிமொழி எம்.பி. சார்ந்த விழாக்கள், முதல்வரின் மருமகன் சபரீசன் குடும்ப நிகழ்ச்சி என ஒன்று விடாமல் ஆஜராகி வருகிறார். இதனால் முதல்வரின் நெருங்கிய நண்பராக வலம் வந்த சுரேஷ் ராஜன் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். நாகர்கோவில் தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று தனது ஆதரவாளர்களிடம் கூறி வரும் அவர், தேர்தலில் சீட் பெற தற்போது முதலே கட்சி தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

ஆனால், கடந்த முறை நாகர்கோவில் தொகுதியில் தோல்வியடைந்த சுரேஷ் ராஜனை அவர் தரப்பு வாக்குகள் நிறைந்த கன்னியாகுமரி தொகுதிக்கு மாற்றுமாறும், தனக்கு நாகர்கோவில் தொகுதியை தந்தால் ஜெயித்து காட்டுவேன் என்றும் தொடர்ச்சியாக கட்சி தலைமையிடம் மேயர் மகேஷ் வலியுறுத்தி வருகிறார். நாகர்கோவில் தொகுதிக்கு பொறுப்பில் இருக்கும் திமுக முக்கிய பிரமுகர்கள் தங்களுக்குள் மோதுவது குமரி மாவட்ட திமுகவினர் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *