கும்பகோணம்: கும்பகோணம் காங்கிரஸ் எம்பி அலுவலக முன்பு உள்ள பிளக்ஸில் இருந்த அக்கட்சி தலைவர்களின் முகத்தில் மர்ம நபர் ஒருவர் சாணி பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பபட்ட ஆதிகும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று (அக்.28) காலையில் காங்கிரஸ் கட்சியினர் வழக்கம் போல் அலுவலத்திற்கு வந்தனர்.
அப்போது, அந்த அலுவலகத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ் பேனரில் இருந்த சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரது முகத்தில் மாட்டுச் சாணம் பூசி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கட்சியினர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார அளித்தனர். பின்னர் அந்த பிளக்ஸை நீரை ஊற்றி சுத்தம் செய்துள்ளனர்.
புகாரின் பேரில், போலீஸார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்ட போது, நேற்று (அக்.28ம் தேதி) அதிகாலை 4 மணி அளவில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சாணியை கொண்டு வந்தது மட்டும் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்தான் பூசியதாக பதிவு ஏதும் இல்லை என்று தெரிகிறது.
இதுதொடர்பாக போலீஸார், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தகவலறிந்த காங்கிரஸ் எம்.பி சுதா, இன்று (அக்.29) அலுவலகத்திற்கு வந்து, சாணி பூசிய விவகாரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.