கும்பகோணம்: கும்பகோணத்தில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் துக்காம்பாளையம் தெரு, பழைய பேட்டை பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறனர். இந்த நிலையில் இன்று அதே பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவர் வீட்டின் அருகே செல்போன் டவர் அமைக்க, திடீரென அந்த இடத்துக்கு வந்த தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள், ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதையறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் தலைமையில் பொதுமக்கள், டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதால் கதிர் வீச்சு பாதிப்பு ஏற்பட்டு நோய்களால் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி, பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து கிழக்கு போலீஸார் அந்த இடத்திற்குச் சென்று, இரு தரப்பினரிடம் பேசினார். ஆனாலும் பொதுமக்கள் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, செல்போன் டவர் அமைக்கும் அதிகாரிகளிடம், டவர் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு போலீஸார் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து சென்றனர். இதையடுத்து பொதுமக்களும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.