சிவவடிவங்களில் நடராஜர் திருமேனி மிகவும் விசேஷமானது. சிவன் அபிஷேகப்பிரியர். அவருக்குத் தினமும் அபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் நடராஜப் பெருமானுக்கோ மார்கழித் திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் என ஆண்டில் 5 நாள்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.
அவற்றில் ஒன்று மாசி சதுர்த்தசி. மாசி மகத்துக்கு முன்புவரும் சதுர்த்தசி நாளில் நடராஜப் பெருமானைத் தரிசித்தாலோ அவருக்கு நிகழும் அபிஷேகங்கள் கண்டாலோ வாழ்வில் சந்தோஷம் பெருகும். செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.
சிவபெருமான் நடராஜராக அருளும் தலங்களில் முக்கியமானது கோனேரிராஜபுரம். கும்பகோணம் – காரைக்கால் பாதையில், எஸ்.புதூர் எனும் ஊருக்கு அருகில் உள்ளது கோனேரிராஜபுரம். இத்தல மூலவர் உமாமகேஸ்வரர்.
துர்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தைப் போக்க இந்தத் துர்கையை வழிபாடு செய்துள்ளான். ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள்.
நந்திபகவான் இங்கு ஈசனை வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. எனவே பிரதோஷ காலத்தில் இங்கு வழிபாடு செய்தால் பல மடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள சிவாலயத்தில் காட்சி தரும் ஸ்ரீநடராஜர் விக்கிரகம் விசேஷமானது. பஞ்சலோகத்தால் ஆன இந்த விக்கிரகத்தின் மார்பில்… மனித உடலில் இருப்பது போன்று ஒரு “மரு’வையும் முடியையும் காணலாம். இந்த விக்ரகத் திருமேனி உருவான சம்பவம் சிலிர்ப்பூட்டுவது.
சோழ மன்னன் ஒருவரது கனவில் தோன்றிய இறைவன், கோனேரிராஜபுரம் சிவாலயத்தில் நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி பணித்தார்.
சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து அவரிடம், ”கலைநுட்பத்துடன் கூடிய பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை 90 நாள்களுக்குள் வடிக்க வேண்டும். அது, அளவில் பெரிதாகவும் அனைவரும் பாராட்டும்படியும் இருக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார் மன்னர்.