க்ஷேத்திர பாலர்
திருவலஞ்சுழியில் அருள்புரியும் க்ஷேத்திர பாலர்தான் ராஜராஜ சோழனின் குலதெய்வம் என்கிறது வரலாறு. வெள்ளை விநாயகருக்கு அருகிலேயே க்ஷேத்திர பாலர் கோயில் உள்ளது. க்ஷேத்திர பாலர் என்றால் பைரவரையே குறிக்கும். ராஜராஜ சோழனின் பட்டத்து ராணியான உலகமாதேவி எனும் தந்திசக்தி இந்த க்ஷேத்திர பாலர் கோயிலை எழுப்பியதாகக் கல்வெட்டு கூறுகிறது.
ஏகவீரி
இங்குள்ள அஷ்டபுஜ காளியை ‘ஏகவீரி’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மன்னன் ராஜராஜனின் மாமியாரான குந்தணன் அமுதவல்லியார், பிடாரி ஏகவீரிக்கு ‘அவபல அஞ்சனை’ செய்வதற்காக நிவந்தங்கள் வழங்கினார் என்ற கல்வெட்டு இங்குள்ளது.
சோழர்கள் இந்த சந்நிதியில் தங்களின் வாள், வேல் போன்ற ஆயுதங்களை வைத்து வழிபட்டு, இவளிடம் உத்தரவுபெற்ற பிறகே போருக்குப் புறப்படுவார்கள் என்றும் வரலாறு கூறுகின்றது.

எண்ணற்ற சந்நிதிகளுடன் கூடிய இந்த பிரமாண்ட ஆலயத்தை முற்காலத்தில் தேவ சிற்பியான விஸ்வகர்மா எழுப்பினார் என்கிறார்கள். பிற்காலத்தில் சோழர்களால் இந்த ஆலயம் விஸ்தரிக்கப்பட்டது.
நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், பிச்சாடனர், நடராஜர், அர்த்தநாரீஸ்வரர், துர்கை, சனீஸ்வரர் என கோஷ்ட தெய்வங்களும், லட்சுமி, சரஸ்வதி, 32 சிவலிங்கங்கள், நான்கு விநாயகர்கள், பாலமுருகன், மகாவிஷ்ணு, துர்கை, சப்த மாதர், வலஞ்சுழி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி எனத் தனிச் சந்நிதி தெய்வங்களும் இங்கே அருள் செய்கின்றனர்.
‘மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலங் கொள்வார் அடி என் தலைமேலவே!’ என்று பாடுகிறார் அப்பர் பெருமான். இதைப் படித்தே ராஜராஜ சோழன் தன்னை சிவபாதசேகரன் என்றும் சிவசரண சேகர தேவர் என்றும் அறிவித்துக்கொண்டார் என்கிறது வரலாறு.
இந்த ஆலயத்தின் சிறப்புகள் இன்னும் பல உள்ளன. வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம் இது என்பதால் வாய்ப்புக்கிடைக்கும்போது சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.