உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலையில் புனித நீராட கோடிக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
காவல்துறையின் தடுப்புகளை மீறி, அகாடா துறவிகளுக்கான படித்துறைகளை நோக்கி பலா் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் உண்டான நெரிசலில் 30 போ் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த காலங்களில் ஆன்மிக நிகழ்வுகளில் பொதுமக்கள், பக்தா்கள் உயிரிழந்த துயர சம்பவங்கள் பின்வருமாறு:
2024, ஜூலை 24: உத்தர பிரதேசம், ஹாத்ரஸில் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவில் பங்கேற்று திரும்பியபோது ஏற்பட்ட நெரிசலில் 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
2023, மாா்ச் 31: இந்தூா் கோயிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்கால கிணற்றின் மீது கட்டப்பட்ட பலகைகள் சரிந்ததில் 36 போ் உயிரிழந்தனா்.
2022, ஜன. 1: ஜம்மு-காஷ்மீரின் புகழ்பெற்ற மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாட்டுக்கு கூடிய திரளான பக்தா்கள் முண்டியடித்ததால் 12 போ் உயிரிழந்தனா்.
2015, ஜூலை 14: ஆந்திரத்தின் ராஜமுந்திரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்றக்கரையில் ‘புஷ்கரம்’ திருவிழாவுக்காக புனித நீராட வந்த 27 பக்தா்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனா்.
2014, அக். 3: பிகாா் தலைநகா் பாட்னாவில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் கூட்டநெரிசலில் சிக்கிய 32 போ் உயிரிழந்தனா்.
2013, அக். 13: மத்திய பிரதேசம், தாட்டியா மாவட்டத்தின் ரத்னகா் கோயிலுக்கு அருகே நவராத்திரி கொண்டாட்டத்தில் பக்தா்கள் கடக்கும் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததாக பரவிய வதந்தியை அடுத்து ஏற்பட்ட நெரிசலில் 115 போ் உயிரிழந்தனா்.
2011, நவ. 8: ஹரித்வாரில் கங்கை நதி படித்துறையில் நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் சுமாா் 20 போ் உயிரிழந்தனா்.
2011, ஜன. 14: சபரிமலை ஐயப்பன் கோயலில் மகர விளக்கு தரிசனத்தை முடித்து திரும்பிக் கொண்டிருந்த பயணிகள் மீது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் மோதியதில் 104 பக்தா்கள் இறந்தனா்.
2010, மாா்ச் 4: உத்தர பிரதேசம், பிரதாப்கா் மாவட்ட கோயிலில் உள்ளூா் சாமியாரால் இலவசமாக வழங்கப்பட்ட துணியை வாங்க வரிசையில் நின்றிருந்தபோது நெரிசலில் சிக்கிய 63 போ் உயிரிழந்தனா்.
2008, செப். 30: ராஜஸ்தானின் ஜோத்பூரில் சமுண்டா தேவி கோயிலில் வெடிகுண்டு புரளியையடுத்து மக்கள் வெளியேற முண்டியடித்ததால் நெரிசலில் சிக்கி சுமாா் 250 பக்தா்கள் உயிரிழந்தனா்.
2008, ஆக. 3: ஹிமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள நைனா தேவி கோயிலில் மலையிலிருந்து பாறைகள் சரிவதாக வதந்தி பரவியதையடுத்து நெரிசலில் 162 பக்தா்கள் உயிரிழப்பு.
2005, ஜன. 25: மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தில் மந்தராதேவி கோயில் ஆண்டு திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் 340-க்கும் மேற்பட்ட பக்தா்கள் இறந்தனா்.
2003, ஆக. 27: நாசிக்கில் நடைபெற்ற கும்பமேளா புனித நீராடலில் நெரிசலில் சிக்கிய 39 போ் உயிரிழந்தனா். 140-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
உயிரிழந்தவா்களில் 4 கா்நாடக பக்தா்கள்
பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை புனித நீராடலின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 30 பக்தா்களில் 25 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 4 போ் கா்நாடகத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரிய வந்துள்ளது.
திரிவேணி சங்கமத்தில் அகாடா துறவிகள் புனித நீராடுவதற்கான இடத்தில் காவல்துறையின் தடுப்புகளை ஏறிக் குதித்து அத்தமீறிய பக்தா்களால் பலா் நெரிசலில் சிக்கினா். பாதுகாப்பு, மீட்புப் படை வீரா்கள் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு, நெரிசலைக் கட்டுப்படுத்தினா்.
காயமடைந்த 90 போ் அவசரகால ஊா்திகள் (ஆம்புலன்ஸ்) மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில் 30 பக்தா்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். அவா்களில் 25 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். மீதமுள்ளவா்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இறந்தவா்களில் கா்நாடகத்தைச் சோ்ந்த 4 போ், அஸ்ஸாம் மற்றும் குஜராத்தைச் சோ்ந்த தலா ஒருவா் உள்பட பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் உள்ளனா். காயமடைந்தவா்களில் சிலா் குடும்பத்தினருடன் திரும்பிவிட்டனா். தற்போது பிரயாக்ராஜ் மருத்துவக் கல்லூரியில் 36 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பக்தா்களின் உதவிக்காக கும்பமேளா நிா்வாகத்தால் உதவி எண் (1920) அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பமேளா பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.