கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று பாமக மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. ஆரம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வரும் இவர் கடந்த 12-ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அன்று மதியம் பள்ளி முடிந்ததால், ஆரம்பாக்கத்தில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு செல்வதற்காக, ரயில் நிலையத்தை கடந்து சென்ற அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்ற இளைஞர் ஒருவர், அவரை மாந்தோப்பு பகுதிக்கு தூக்கிச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து அழுதவாறு பாட்டி வீட்டுக்கு வந்த சிறுமி, நடந்த சம்பவம் குறித்து, பாட்டியிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சிறுமி கும்மிடிப் பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு, சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்ற சிறுமி, கடந்த 19-ம் தேதி வீடு திரும்பினார்.
இச்சம்பவம் குறித்து, ஆரம்பாக்கம் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, திருவள்ளூர் எஸ்பி விவேகானந்தா சுக்லாவின் மேற்பார்வையில், 5 தனிப்படை மற்றும் 3 சிறப்பு குழுக்கள், தமிழகப் பகுதிகள் மட்டுமல்லாமல், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பிற மாநில பகுதிகளிலும் தீவிரமாக தேடி வருகின்றன.
இந்நிலையில், சம்பவம் நடந்து 10 நாட்கள் கடந்தும் சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்படாததை கண்டித்து இன்று பாமக பொருளாளர் திலகபாமா தலைமையில் பாமகவினர், புரட்சி பாரதம் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆரம்பாக்கம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.