திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12 ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது, மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.
இந்த நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில், ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து கடந்த 25 ஆம் தேதி கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் உள்ள இரவு உணவகத்தில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜூபிஷ்வர்மா (35) என்பதும், அவரே குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து தீவிர விசாரணைக்குப் பின் பூந்தமல்லி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள போலீஸ் தரப்பில் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இதற்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜூ பிஷ்வர்மாவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.