குறுக்கு வழி பயணத்தால் விபரீதம்: கிணற்றுக்குள் பாய்ந்த கார்… குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகில் உள்ள தீண்டோரி என்ற இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கார் ஒன்று சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் விழுந்து 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். சுனில் தர்குடே என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெரியவர்களும் ஆறு குழந்தைகளும், திண்டோரியில் உள்ள ஒரு பயிற்சி மையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றிற்கு காரில் சென்று இருந்தனர். இரவில் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர்கள் வீட்டிற்கு காரில் புறப்பட்டனர்.

சுனில் காரை ஓட்டினார். அவர்களது ஊர் நிகழ்ச்சி நடந்த கிராமத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. காரில் சுனில் தர்குடே தவிர அவரது மனைவி ரேஷ்மா (27), மகள் குண்வந்தி (11), சுனிலின் மைத்துனி ஆஷா (32), ஆஷாவின் குழந்தைகள் ஸ்ரேயஷ் (11), ஸ்ராவணி (11), ஸ்ரத்தா (13) மற்றும் ஸ்ருஷ்டி (14), மற்றும் ஒரு உறவினரின் குழந்தையான சம்ரித்தி (7) ஆகியோர் இருந்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் சுனில் வீட்டிற்கு வேகமாக செல்லும் நோக்கில் காரை மெயின் ரோடு வழியாக செலுத்தாமல் குறுக்கு வழியில் செலுத்தினார். சாலை முழுக்க கடுமையான இருட்டு இருந்தது. வழியில் கார் அவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்றது. இதில் சாலையோரம் இருந்த ஒரு கிணற்றின் சுவரின் மீது மோதி கார் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்தது.

காரில் இருந்தவர்கள் உயிருக்கு போராடி கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் கிணறு அதிக ஆழமாக இருந்ததாலும், இருட்டாக இருந்ததாலும் அவர்களால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். நீச்சல் வீரர்கள் கிணற்றுக்குள் குதித்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மின் விளக்கு வசதியுடன் கயிறு கட்டி காரை வெளியில் இழுத்தனர்.

ஆனால் அதற்குள் காரில் இருந்த 9 பேரும் பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்து விட்டனர். ஒரு குழந்தையின் உடல் காருக்குள்ளேயே இருந்தது. கிணறு ரோட்டிற்கு மிகவும் அருகில் இருந்தது. இதையடுத்து கிணற்றை மூடிபோட்டு பாதுகாப்பான முறையில் வைத்திருக்க தவறியதாக கிணற்று உரிமையாளர் ராஜேந்திரா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கிணற்றை மண் போட்டு நிரப்பிவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *