சென்னை: தமிழகத்தில் குறுவைப் பருவத்தில் 11.21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1.45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,709 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக நெல் கொள்முதல் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 2020-21-ம் ஆண்டில் குறுவைப் பருவத்தில் 5.74 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் 2025–26-ம் ஆண்டு குறுவைப் பருவத்தில் 58 நாட்களில் மட்டும் 11.21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
வேளாண் துறையின் மதிப்பீட்டின்படி செப்டம்பர் மற்றும் அக்டோபரில் 11.07 லட்சம் டன் நெல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று மதியம் வரை 11.21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1,872 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தினமும் 30 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், டெல்டா மாவட்டங்களில் இருந்து ரயில் வேகன்கள் மற்றும் லாரிகள் மூலமாக அதை மற்ற மாவட்டங்களுக்கும் நகர்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதுதவிர ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 634 விவசாயிகளுக்கு ரூ.2,709 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதை அறிந்து கொள்ளாமல் சில அரசியல் கட்சித் தலைவர்களும், நிலைமையின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளாத சிலரும் தேவையின்றி குறைகூறி வருகின்றனர். நெல் கொள்முதலில் சிரத்தையுடன் செய்யும் அரசு பணிகள் பற்றி நெல் விவசாயிகளுக்கு, குறிப்பாக டெல்டா விவசாயிகளுக்கு நன்கு தெரியும்.
எனவே, தேவையற்ற குறைகளைக் கூறாமல் ஆக்கபூர்வமான ஆலோசனை களை வழங்கினால் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக நெல் கொள்முதலில் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.