குறைந்த கட்டணம்… விரைவான பயணம்! – மக்களின் வரவேற்பை பெற்ற ‘பைக் டாக்சி’ திட்டம் | bike taxi scheme benefits and issues in chennai explained

1343206.jpg
Spread the love

சொந்​தமாக ஒரு உணவகத்தை கூட நடத்தாத ஒரு நிறு​வனத்​தால் இன்று உணவு டெலிவரி செய்ய முடிகிறது. சொந்​தமாக ஒரு தங்கும் விடுதி கூட வைத்​திராத ஒரு நிறு​வனத்​தால், தேசிய அளவில் தங்கும் விடுதி முன்​ப​திவு செய்து வழங்​கும் சேவையை வழங்க முடிகிறது.

இச்சேவைகள் அனைத்​தும் நாம் யாரை​யும் நாடி செல்​லாமல், நம் கைக்​குள்​ளேயே ஸ்மார்ட் போன்கள் வடிவில், இணையதளம் வழியாக நொடிப்​பொழு​தில் பெற முடிகிறது. இதற்கு தொழில்​நுட்ப வளரச்சி தான் முக்கிய காரணம். உலக அளவில் நடந்து வரும் தொழில்​நுட்ப வளர்ச்சி மனிதனின் வாழ்​வியலை வியத்தகு மாற்​றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொழில்​நுட்பம் வழியாக தான் தற்போது அடித்​தட்டு மக்களின் போக்கு​வரத்தை எளிமை​யாக்​கும் வகையில் பைக் டாக்சி வந்திருக்​கிறது.

இதுநாள் வரை குறைந்​த​பட்சம் 4 பேர் பயணிக்​கும் கார் சேவை, 3 பேர் பயணிக்​கும் ஆட்டோ சேவைகள் அமலில் இருந்தன. ஒரு நபர் பயணிப்​பதாக இருந்​தா​லும், நிர்​ண​யிக்​கப்​பட்ட கட்ட​ணத்தை முழு​மையாக செலுத்த வேண்டி இருந்​தது. இந்நிலை​யில் ஒரு நபர் பயணிக்க ஏதுவாக, அவர்​களின் செலவை குறைக்​கும் வகையில், சென்னை​யில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி​யில் தனியார் நிறு​வனத்​தால் பைக் டாக்சி சேவை தொடங்​கப்​பட்​டது.

இதையடுத்து, பல்வேறு நிறு​வனங்​களும் பைக் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன. ஒரு நபர் பயணிப்​ப​தால் கார்​கள், ஆட்டோக்கள் சாலையை அடைத்து போக்கு​வரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்​கும் வகையிலும் இந்த சேவை உள்ளது. குறைவான கட்ட​ணம், சாலை​யில் நெரிசல் இருந்​தால், சந்து பொந்​துக்​களில் எளிதில் நுழைந்து, விரைவாக செல்ல வேண்டிய இடங்​களுக்கு செல்ல முடிந்​த​தால், இந்த சேவை பொது​மக்கள் மத்தி​யில் பெரும் வரவேற்பை பெற்றுள்​ளதுடன், பயன்​படுத்து​வோர் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்​துள்ளது.

இந்நிலை​யில் வணிக ரீதி​யில் பைக்குகளை பயன்​படுத்து​வ​தில் உள்ள பாதகங்களை குறிப்​பிட்டு, அந்த சேவையை முறைப்படுத்த அரசு முற்​பட்டு வருகிறது. அடித்​தட்டு மக்களின் பொருளா​தாரம் சார்ந்த இந்த சேவையை, வாக்கு வங்கி மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக அரசு முடக்​கி​விடுமோ என பைக் டாக்சி சேவை​யால் பயன்​பெற்ற பொது​மக்கள் அச்சத்​துக்​கு உள்​ளாகி​யுள்​ளனர்.

சுரேஷ்

இது தொடர்பாக சென்னை வேளச்​சேரியைச் சேர்ந்த ஐடி ஊழியர் சுரேஷ் கூறுகை​யில், “பைக் டாக்​சி​யில் மிகக் குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்​கப்​படு​கிறது. அத்துடன் விரைவாக வந்து ‘பிக்​அப்’ செய்​கிறார்​கள். பெரும்​பாலும் பயணத்தை ரத்து செய்​வ​தில்லை” என்றார்.

பிரேமலதா

தொழில்​முனை​வோர் வி.பிரேமலதா கூறுகை​யில், “அவசர தேவைக்கு பயனுள்ளதாக இருக்​கிறது. பெண்கள் அச்சமின்றி பைக் டாக்​சி​யில் பயணிக்க நிறைய பெண் ஓட்டுநர்கள் வர வேண்​டும். ஹெல்​மெட்டை பலரும் பயன்​படுத்து​வ​தால் ஹெல்​மெட்கள் பராமரிப்​பின்றி இருக்​கிறது” என்று தெரி​வித்​தார்.

வீர.சோழன்

தனியார் மென்​பொருள் நிறுவன ஊழியர் வீர.சோழன் கூறும்​போது, “நான் பணிக்கு செல்​லவோ, பணி முடிந்து வீடு திரும்பவோ பைக் டாக்​சியை பயன்​படுத்​தினால் எனக்கு தலா ரூ.40 மட்டுமே செலவாகிறது. ஷேர் ஆட்டோ​வில் பயணித்​தால் ரூ.20 தான் செலவாகும். ஆனால், அலுவல​கத்​திலிருந்து ஷேர் ஆட்டோ இயக்​குமிடம் வரையும், பிரதான சாலை​யில் இறங்கி வீடு வரையும் நடந்து செல்ல வேண்​டும்.

இதுவே பைக் டாக்​சி​யில் பயணித்​தால் வீட்டு வாசலிலேயே இறங்கி விடலாம். வேலை​வாய்ப்​பின்மை அதிகரித்து வரும் நிலை​யில், இது ஒரு வேலை​வாய்ப்பு அளிக்​கும் துறையாக மாறி வருகிறது. குடும்ப சூழ்​நிலை காரணமாக உயர்​கல்வி பயிலச் செல்ல முடியாத மாணவர்​கள், பகுதி நேரமாக பைக் டாக்​சி​யில் பணிபுரிவ​தால் உயர்​கல்​வியை தொடர முடிகிறது. அதனால் இந்த சேவை தொடர வேண்​டும்” என்றார்.

சசிதரன்

வங்கி ஊழியர் வி.சசிதரன் தெரிவிக்கை​யில், “பைக் என்ப​தால் போக்கு​வரத்து நெரிசல் உட்பட சிக்​கலான நேரங்​களி​லும் விரைந்து செல்ல வேண்டிய இடத்​துக்கு சென்​று​விடலாம். ஒருவர் மட்டும் செல்ல ஆட்டோ, கார் எடுப்​ப​தற்கு பதிலாக பைக் டாக்சி சிறந்த தேர்வு” என்றார்.

ரோகிணி

தனியார் நிறுவன ஊழியர் பி.ரோகிணி கூறும்​போது, “பெண்​களுக்கான பிங்க் பைக்​கில் பெண் ஓட்டுநர்கள் வருகிறார்​கள். ட்ராக் செய்வது போன்ற பல்வேறு பாது​காப்பு அம்சங்கள் இருந்​த​போதும் ஆண் ஓட்டுநர்கள் வரும்​போது, சிறிய நெருடலுடனேயே பயணிக்​கிறோம். பெண்​களுக்கான பாது​காப்பை மட்டும் உறுதிப்​படுத்​தினால், பைக் டாக்சி சேவை தவிர்க்க முடி​யாததாக மாறி​விடும்” என்றார்.

கோம​திநாயகம்

பகுதி நேர பணி: பைக் டாக்சி ஓட்டுநராக பணிபுரி​யும் கோம​திநாயகம் கூறும்​போது, “நான் 6 மாதங்​களுக்கு மேலாக பைக் டாக்சி ஓட்டி வருகிறேன். தனியார் நிறு​வனத்​தில் வேலைபார்க்​கும் நிலை​யில், பகுதி நேரமாக ஓட்டி நாள் ஒன்றுக்கு ரூ.300 வரை சம்பா​திக்க முடிகிறது. இதுவே முழுநேரமாக ஓட்டி​னால் ரூ.1000 வரை சம்பா​திக்க முடி​யும். மேலும், எனக்கான காப்​பீடு, இணைய​வழியில் மருத்துவ ஆலோசனை போன்ற​வை​யும் நிறு​வனம் வழங்குகிறது’’ என்றார்.

டிச.18-ல் வேலைநிறுத்தம்: இதுகுறித்து தமிழக ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்​தின் மாநில செயல் தலைவர் பாலசுப்​பிரமணியம் கூறிய​தாவது: பைக் டாக்​சிக்கு அனுமதி அளிப்பது முறை​யா​காது. இது மோட்​டார் வாகன சட்டத்​துக்கு புறம்​பானது. பைக் டாக்​சிக்கு அனுமதி கொடுப்​பதன் மூலமாக, பெருநிறு​வனங்​களுக்கு ஆதரவாக போக்கு​வரத்து அமைச்சர் செயல்​படு​கிறார். தொழிலா​ளர்கள் மத்தி​யில் மோதல் போக்கு இல்லாமல் இருக்க வேண்​டும். அதை அமைச்சர் செய்ய​வில்லை. எனவே, பைக் டாக்​சியை தடை செய்ய கோரி டிச.18-ம் தேதி வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக போக்கு​வரத்​து துறை அதிகாரிகள் கூறிய​தாவது: பைக் டாக்​சிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்​கி​யுள்​ளது. இவற்​றைத் தடுக்கக் கூடாது என நீதி​மன்​ற​மும் உத்தரவு பிறப்​பித்​துள்ளது. இதில் பணிபுரி​யும் தொழிலா​ளர்​கள், ‘கிக்’ எனப்​படும் இணையம் சார்ந்த தொழில் வரம்​புக்​குள் இடம்​பெறு​வர்.

சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்​படுத்த முடி​யாது என்ற அடிப்​படை​யில் இ​தில் பயணிப்​போருக்கு ​காப்​பீடு பெற ​முடியாத சூழல் இருக்​கிறது. எனவே, மத்​திய அரசின் வழி​காட்டு​தலை பின்​பற்றி தமிழக போக்கு​வரத்​து துறை​யும் வழி​காட்டு​தல்களை உரு​வாக்கி அரசின் ஒப்பு​தலுக்கு அனுப்​பி​யுள்​ளது. இதுகுறித்து அரசு ​விரை​வில் உத்​தர​வு பிறப்​பிக்கும்​” என்​றனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *