குற்ற வழக்குகளில் நேரடி சாட்சிகளாக உள்ள குழந்தைகளுக்கு உளவியல் சிகிச்சை அளிக்க கமிட்டி: அரசு தகவல் | New Guidelines for Child Witnesses in Violent Crime Cases

Spread the love

சென்னை: குற்ற வழக்குகளில் சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சிகளாக உள்ள குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக சிகிச்சை அளிக்க மாநில அளவில் விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவையில் 5 வயது சிறுமியின் கண் முன்பாக, அவரது தாயாரை கொடூரமாகக் கொலை செய்து எரித்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அந்த தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், இதுபோன்ற சிக்கலான வழக்குகளில் கொலைகளை நேரில் பார்த்த முக்கிய சாட்சிகளாக உள்ள குழந்தைகளை ஆற்றுப்படுத்தும் விதமாக மனநல ரீதியிலான உளவியல் ஆலோசனைகள், சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டியிருந்தார். அதையடுத்து, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இந்த வழக்கு நேற்று இதே அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜி்ன்னா ஆஜராகி, தமிழக டிஜிபி சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், “மாநிலம் முழுவதும் கொலை போன்ற முக்கிய குற்ற வழக்குகளில் குழந்தைகள் சாட்சிகளாக உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 161. இதில் ஆவடி காவல் ஆணையரகக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் 25 வழக்குகளும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 21 வழக்குகளும், கோவை மாவட்டத்தில் 13 வழக்குகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 வழக்குகளும் உள்ளன.

சாட்சிகளாக உள்ள குழந்தைகளுக்கு மனநலம் மற்றும் உளவியல் ரீதியாக சிகிச்சையளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் டிஐஜி, பள்ளிக் கல்வித் துறையின் என்எஸ்எஸ் இணை இயக்குநர், குழந்தைகள் நலத்துறை துணை இயக்குநர், சமூக நலத்துறை திட்ட மேலாண்மை மூத்த ஆலோசகர், குழந்தைகள் நலத்துறை அதிகாரி, மனநலம் மற்றும் உளவியல் சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய கமிட்டி விரைவில் அமைக்கப்பட உள்ளது.

இந்த கமிட்டி விதிமுறைகளை வகுக்கும் வரை, குற்ற வழக்குகளின் சாட்சிகளாக இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், விசாரணையை ஆக.29-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *