“குலவிளக்கு திட்டம்” ரேசன்கார்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம்: எடப்பாடி தேர்தல் வாக்குறுதி  – Kumudam

Spread the love

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் தமிழக கட்சிகள். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல் கட்சியாக முதற்கட்ட தேர்தல் அறிக்கையை அதிமுக வெளஇயிட்டுள்ளது. 

எம்ஜிஆரின் 109வது பிறந்த நாளான இன்று, அதிமுக தலைமை அலுவலகம் வருகை தந்த எடப்பாடி பழனிசாமி. அங்கிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி கெளரவித்தார். இதன் பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்புக்களையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவின்  முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். 1. மகளிர் குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.2. டவுன் பஸ்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டணமில்லாத பஸ் பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பெண்களுக்கான கட்டணமில்லா பஸ் பயணத்திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

3. அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். நகரப்பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி இலவசமாக அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.4. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். 5. ரூ.25,000 மானியத்துடன், 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும். இவ்வாறு அறிவித்தார்.

இதை தொடர்ந்து  நிருபர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். கேள்வி : ஏற்கனவே திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறார்கள். கடன் சுமை அதிகமாக இருக்கும்போது எப்படி சமாளிப்பீர்கள்?

இபிஎஸ் ; அவர்களுக்குத் திறமையில்லை, எங்களுக்கு இருந்தது. நாங்கள் ஆட்சி செய்கிறபோது 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் தான் கடன் இருந்தது. அரசுக்கு வரி இல்லாத நேரத்தில் கூட கொரோனாவுக்கு 40 ஆயிரம் கோடி செலவு செய்தோம். நாங்கள் திறமையாகக் கையாண்டு நிதிச்சுமை குறைவாக உருவாக்கித் தந்திருக்கிறோம். திமுக அரசு பொறுப்பேற்றதும் நிதி மேலாண்மை செய்ய நிபுணர் குழு அமைத்து கடன் குறைக்கப்படும் என்றனர், வருவாய் உயர்த்தப்படும் என்று சொன்னார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக கடன் தான் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சி முடின்கின்ற தருவாயில் சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

கேள்வி : ஆண்களுக்கும் கட்டணமில்லாப்  பேருந்து திட்டம் போக்குவரத்து துறை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்காதா?

இபிஎஸ் : அதுதான் நான் சொல்கிறேன் நிர்வாகத் திறமை இருந்தால் எல்லாவற்றையும் சமாளிக்கலாம். நிர்வாகத் திறமையற்ற அரசு இருக்கின்றபோது தான் நிதிச்சுமை அதிகரிக்கிறது. 

கேள்வி : தாலிக்கு தங்கம் திட்டம் தொடருமா?

இபிஎஸ் : அதாவது, இரண்டாம் கட்டத் தேர்தல் அறிக்கை முழுமையாக வெளியிடுகின்றபோது இன்னும் பல அறிவிப்புகள் வெளியிடப்படும். எங்களுடைய தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஒவ்வொரு மண்டலமாக போய்க்கொண்டு இருக்கிறார்கள், மக்களிடம் மனு வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் கோவை மண்டலத்துக்குச் செல்லவில்லை. அங்குசென்று கருத்துகளை விண்ணப்பமாகப் பெற்று, அதையெல்லாம் சேகரிக்கப்பட்டு, அறிக்கையாக தயாரிக்கப்பட்டு,  ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மக்கள் என்னென்ன நினைக்கிறார்களோ அவையெல்லாம் எங்களுடைய தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.

கேள்வி : தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் கட்சிகள் இணையுமா?

இபிஎஸ் : இணையும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *