இது குறித்து கரூர் மாவட்ட எஸ்.பி ஜோஸ் தங்கையா உத்தரவின் பெயரில், குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் பத்திரிகையாளர்களை மீட்கச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர் கதிரவன், கேமராமேன் செபாஸ்டின் உள்ளிட்ட இருவரையும் குளித்தலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வழக்கறிஞர் திருமலை ராஜன், உதவியாளர் ராஜமாணிக்கம் ஆகிய இருவரும் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்கிய எம்.எல்.ஏ தரப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் நடைபெறும், சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற @NewsTamilTV24x7 செய்தியாளர் திரு. கதிரவன், ஒளிப்பதிவாளர் திரு. செபாஸ்டின் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல், கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கனிமச் சுரண்டலை கேள்வி கேட்டதற்காக, ஊடகவியலாளர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த ரவுடிகள், முழுக்க முழுக்க திமுகவின் பாதுகாப்பிலேயே செயல்படுகிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். திமுக அரசு, யாருக்காக ஆட்சி நடத்துகிறது? கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்குமா?
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக்குப் பின்னால் உள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.