குளிரில் ஏன் உடல் நடுங்குகிறது தெரியுமா? – அறிவியல் காரணம் இதான்!

Spread the love

குளிர்காலம் வரும்போது அல்லது குளிர்ந்த காற்று வீசும்போது நமது உடல் தாமாகவே நடுங்குவதை நாம் அனைவரும் உணர்ந்து இருப்போம். ஸ்வெட்டர், கனமான ஆடைகள் அணிந்து இருந்தாலும் கூட சில சமயங்களில் இந்த நடுக்கம் நிற்பதில்லை.

எதற்காக இவ்வாறு குளிரின் போது உடல் நடுங்குகிறது என்பது குறித்தும் இது வெறும் குளிரின் தாக்கம் தானா? என்பது குறித்தும் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

உடலில் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள உடல் மேற்கொள்ளும் ஒரு செயல்முறையே இந்த நடுக்கம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Human

மருத்துவர் நடாஷா புயான் கூற்றுப்படி, உடலுக்குள் குளிர் ஏற்படும் போது வெப்பத்தை உருவாக்குவதற்காக தான் இந்த நடுக்கம் ஏற்படுகிறது. அதாவது தசைகள் வேகமாக சுருங்கி விரிவதன் மூலம் வெப்பம் உருவாக்கப்படுகிறது.

இந்த செயல்முறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. தும்மல், புல்லரிப்பு போன்றவைப் போலவே நடுக்கமும் நமது உடலின் கட்டுப்பாட்டின் மீது நடக்கும் ஒரு விஷயம்.

மூளையில் உள்ள ‘ஹைபோதலாமஸ்’ (Hypothalamus) என்ற பகுதிதான் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் ‘தெர்மோஸ்டாட்’ போலச் செயல்படுகிறது. உடலின் வெப்பநிலை சற்று குறைந்தாலும், ஹைபோதலாமஸ் உடனடியாகத் தசைகளை, வேகமாக இயங்க செய்கிறது. இதுவே நடுக்கமாக வெளிப்படுகிறது.

பொதுவாக மனித உடலின் சராசரி வெப்பநிலை 97 முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும். இது குறையும்போது நடுக்கம் ஏற்படும். ஆனால் வயது மற்றும் உடல்நிலையைப் பொறுத்து இது மாறுபடும் என்கிறார் நடாஷா.

குளிர் மட்டும்தான் காரணமா?

நமக்கு ஏற்படும் நடுக்கம் குளிர் தவிர வேறு சில காரணங்களாலும் ஏற்படலாம். நாம் பயப்படும்போதோ அல்லது அதிக பதற்றத்தில் இருக்கும்போதோ, உடலில் அட்ரினலின் சுரப்பு அதிகரிக்கும். இது தசைகளைச் சுருங்கச் செய்து நடுக்கத்தை ஏற்படுத்தும். குளிர் இல்லாத சூழலிலும் ஒருவருக்கு நடுக்கம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம் என்கிறார் மருத்துவர் நடாஷா.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *