” நாடோடி, இலக்கில்லா திசைகளை நோக்கியே பயணப்பட்டுக்கொண்டிருப்பான்… அந்தப் பயணங்களின் வழி பல இலக்குகளை எட்டியிருப்பான்’
அவ்வாறு நாடக கலைஞர், ட்ராவலர், கதைச்சொல்லி என, தன் பயணத்தின் வழி பல்வேறு பரிமாணங்களை எட்டியிருக்கும் நாடோடிக் கலைஞர் குமார் ஷாவுடன் உப்புக்காத்து படிந்த பெசன்ட் நகர் கடற்கரையில் அமர்ந்து உரையாடத் தொடங்கினோம்.
“என்னைப் பொறுத்தவரையில் கதைகள் நிறைய கேட்கமுடிந்தவனால் தான் ஒரு நல்ல கதைச்சொல்லியாக இருக்க முடியும். இந்தியாவில் 10 மாநிலங்களுக்கு மேல் எந்தக் குறிக்கோளும் இல்லாமல் பயணம் செய்திருக்கேன். இந்தப் பயணத்துல நிறைய குழந்தைகளோட, மக்களோட பேசியிருக்கிறேன். ஒரு டீக்கடையில யாருன்னு தெரியாத நபர்கள்கிட்ட பேசும் போதுகூட அவங்க சொல்ற கதையை வைத்து ஒரு படமே எடுக்கலாம்ன்னு தோணும்.