Last Updated:
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இரண்டரை வயது குழந்தை வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது டேபிளின் விளிம்பில் மோதியதில் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவர், இரத்தப்போக்கு ஏற்பட்ட குழந்தைக்கு தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக் போட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. பின்னர் குழந்தையை சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டியிருந்தது. இந்த சம்பவம் மீரட்டில் உள்ள ஜாக்ரிதி விஹார் எக்ஸ்டென்ஷனில் உள்ள மேப்பிள்ஸ் ஹைட்ஸில் நடந்தது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, சர்தார் ஜஸ்பிந்தர் சிங்கின் குடும்பம் மீரட்டில் உள்ள ஜக்ருதி விஹார் காலனியில் வசிக்கிறது. சம்பவத்தன்று மாலை அவரது இரண்டரை வயது மகன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் டேபிளின் விளிம்பில் மோதியதில் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது.
இதனையடுத்து குழந்தையை உடனடியாக அருகிலுள்ள பாக்யஸ்ரீ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர், தையல் போடுவதற்குப் பதிலாக, ஃபெவிக்விக் எடுத்து காயத்தில் தடவினார். காயத்தில் பசை தடவியவுடன், குழந்தை வலி தாங்க முடியாமல் அழத் தொடங்கியது. பெற்றோர்கள் மருத்துவர்களிடம் இது குறித்து கேட்டபோது, குழந்தை பதற்றமாக இருப்பதாகவும், சிறிது நேரத்தில் வலி குறையும் என்றும் மருத்துவர் கூறினார்.
குழந்தையின் தந்தையின் கூற்றுப்படி, குழந்தை இரவு முழுவதும் வலியால் துடித்தது. குழந்தையை அமைதிப்படுத்த பல முயற்சிகள் செய்தபோதிலும் பலனில்லை, அவனது வலி மேலும் மோசமடைந்ததாக கூறியுள்ளார். வலி குறையாததால், சிறுவனை லோக்ப்ரியா மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். குழந்தைக்கு அங்கே சிகிச்சை அளித்த மருத்துவர்கள் காயத்தில் ஒட்டும் பசை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
காயத்தில் ஒட்டிக்கொண்டிருந்த ஃபெவிக்விக்கை அகற்ற மருத்துவர்களுக்கு 3 மணி நேரம் ஆனது. பின்னர், காயம் சுத்தம் செய்யப்பட்டு, அதன் மீது 4 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஃபெவிக்விக் கண்களில் பட்டிருந்தால் அதிக சேதம் ஏற்பட்டிருக்கும் என்று பெற்றோர் கவலை தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். தனியார் மருத்துவரின் அலட்சியம் குறித்து சிறுவனின் குடும்பத்தினர் உடனடியாக மீரட் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அசோக் கட்டாரியாவிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து மீரட் தலைமை மருத்துவ அதிகாரி (CMO) டாக்டர் அசோக் கட்டாரியா கூறியதாவது, குழந்தையின் குடும்பத்தினரிடமிருந்து எங்களுக்கு புகார் வந்தது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தபின்னர், தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
November 21, 2025 5:38 PM IST
குழந்தையின் காயத்தில் தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக் தடவிய மருத்துவர்…! இறுதியில் நடந்தது என்ன…?
