குழந்தை அழுதாலும் பயணிகளுக்கு தொந்தரவு இருக்க கூடாது.. விமானத்தில் பெண்ணின் நெகிழ்ச்சி செயல் | இந்தியா

Spread the love

ஒரு தாயின் மனநிலையிலும், அதேநேரத்தில் சுற்றி இருப்பவர்களின் நலனை உறுதி செய்யும் நோக்கிலும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரின் செயல் உலகம் முழுவதும் பலரின் இதயங்களை நெகிழச் செய்துள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு இளம் தாய், தனது நான்கு மாத கைக் குழந்தையுடன் சியோலில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு விமானத்தில் பயணம் செய்த போது, அவரது 10 மணி நேர நீண்ட விமானப் பயணத்தின் போது குழந்தை அழலாம் என முன்கூட்டியே எண்ணி, சக பயணிகளை சங்கடப்படுத்தாமல் இருக்க அற்புதமான ஒரு யோசனையை திட்டிமிட்டிருக்கிறார்.

விமானத்தில் இருந்த சுமார் 200 பயணிகளுக்கும் அந்த தாய் தனிப்பட்ட முறையில் சிறிய பிளாஸ்டிக் பை ஒன்றை கொடுத்தார். ஒவ்வொரு பையிலும் மிட்டாய்கள், சூயிங் கம் மற்றும் காது செருகிகள் (earplugs) போன்றவை இருந்தன. அதோடு, பையில் ஒரு இனிய குறிப்பும் இணைக்கப்பட்டிருந்தது, அது அந்தக் குழந்தையின் சார்பாக எழுதப்பட்டிருந்தது.

குழந்தையின் சார்பாக எழுதப்பட்டிருந்த அந்த இனிய கடிதத்தில், “வணக்கம், நான் ஜான் வூ. நான் 4 மாத குழந்தை. இன்று என் அம்மா மற்றும் பாட்டியுடன் என் அத்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அமெரிக்கா செல்கிறேன். இது எனது முதல் விமானப் பயணம், எனக்கு கொஞ்சம் பயமாகவும், பதட்டமாகவும் இருக்கிறது” என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

அடுத்து அந்த தாய், குழந்தையின் சார்பாக நகைச்சுவையுடனும், நாணத்துடனும், “நான் அழுவது அல்லது தொந்தரவு செய்வது இயல்பு. நான் அமைதியாக இருக்க முயற்சிப்பேன், ஆனால் என்னால் உறுதியளிக்க முடியாது. என் குரல் அதிகமாக இருந்தால் இதைப் பயன்படுத்துங்கள் (காது செருகிகளை சுட்டிக்காட்டி). நல்ல பயணம் அமையட்டும்!” என்று கூறியிருந்தார்.

இந்தச் சிறிய கடிதம், அன்பின் வெளிப்பாடாகவும், ஒரு தாயின் முன்கூட்டிய சிந்தனைக்கான சான்றாகவும் விளங்குகிறது.

உலகம் முழுவதும் அவருக்கு குவியும் பாராட்டுகள்

இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதும், பலரும் அந்த தாயின் செயலை பாராட்டினர். பயணிகளின் வசதியை நினைத்து இவ்வாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டதற்காக, அவருக்கு பலர் நன்றியும், தங்களது அன்பையும் வெளிப்படுத்தினர்.

ஒரு பயனர், “அவள் இதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. நாமெல்லாம் குழந்தைகளாக இருந்து தான் வந்திருக்கிறோம், பசியாக இருந்தாலும், பயமாக இருந்தாலும் அழுதோம். பிறரைப் பொறுத்துக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

குழந்தை அழுதாலும் பயணிகளுக்கு தொந்தரவு இருக்க கூடாது.. விமானத்தில் பெண்ணின் நெகிழ்ச்சி செயல்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *