மும்பையைச் சேர்ந்த 17 வயது பெண் தனது ஆண் நண்பருடனான உறவில் கர்ப்பமானார். அவருக்கு இப்போது 18 வயதாகிறது. அவரது வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சி 30 வாரமாகிவிட்டது.
இக்குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும், அதனைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி அப்பெண் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் மும்பை உயர்நீதிமன்றம், அப்பெண்ணின் கருவைக் கலைக்க அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.
குழந்தை பிறந்த பிறகு அதனை யாருக்காவது தத்து கொடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பெண் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இம்மனு நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இம்மனு மீதான விசாரணையில் இறுதியில், மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதித்த நீதிபதிகள், பெண்ணின் வயிற்றில் உள்ள 30 வார கருவைக் கலைக்க அனுமதிகொடுத்ததனர்.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், “‘குழந்தை பெற்றுக்கொள்ள பெண் விரும்பவில்லையெனில் கோர்ட் அதனைக் கட்டாயப்படுத்தக்கூடாது.
குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்களுக்குச் சுதந்திரம் அவசியம். சம்பந்தப்பட்ட பெண் தனது நண்பருடன் விருப்பப்பட்டு உறவு வைத்துக்கொண்டாரா இல்லையா என்பது முக்கியமில்லை. இதில் முக்கியப் பிரச்னை என்னவென்றால் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தை சட்டப்பூர்வமற்றது மற்றும் தாய் அந்தக் குழந்தையைச் சுமக்க விரும்பவில்லை. பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.