`குழாய் மட்டுமிருந்து என்ன செய்வது?' – அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் இறையான்மங்கலம் மக்கள்

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம், இறையான்மங்கலம் கிராமத்தில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் போராடி வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குழாய்கள் வைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் குழாயிலும் தண்ணீர் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து இறையான்மங்கலம் ஊர் தலைவர் ரமேஷிடம் கேட்டபோது,

“எங்க ஊர் பொன்பேத்தி பஞ்சாயத்தின் கீழ் வரக்கூடிய ஒரு கிராமம். ஊரில் 97 சதவிகிதம் பட்டியலின சமூக மக்களும், மூன்று சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்களும் வசித்து வருகிறோம். எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் கிடைக்காது. நிதி ஒதுக்கும் போதுகூட பிற கிராமங்களுக்கு கிடைக்கும் எந்தச் சலுகையும் எங்கள் இறையான்மங்கலம் கிராமத்திற்கு கிடைப்பதில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த காலனி வீடுகள் மட்டுமே இப்போது இருக்கிறது. அதற்குப் பின்பு ஒரு வீடுகூட எங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. தண்ணீர் வசதி இல்லாமல் 18 வருடங்கள் போராடிய போராட்டத்திற்கு பிறகு, ஆறு மாதங்களுக்கு முன்பு தான் குழாய்கள் வைத்தார்கள்.

ஆனாலும் அதில் நீர் வரவில்லை. நீர் இல்லாததால் கழிவறைகளையும் எங்களால் கட்ட முடியாமல், தினமும் காடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலையிலேயே இருக்கிறோம். இங்கு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கக்கூடிய ஈழக்காளி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வாரம் ஐம்பதில் இருந்து 100 பக்தர்கள் வரை வழிபாட்டிற்காக வெளியூர்களில் இருந்து வருகிறார்கள். அப்படி வருபவர்கள் செல்வதற்குக்கூட கழிவறை இல்லை. அதனால் கோயிலுக்கு வந்து செல்பவர்களும் எங்களைப்போல அவதிப்படுகிறார்கள். ஆகவே அரசு எங்கள் ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மட்டுமாவது இன்னமும் காலம் தாழ்த்தாமல் உடனே செய்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *