உதகை: உதகையிலிருந்து நடுவட்டம் மலைப்பாதை வழியாக கேரளா மற்றும் கர்நாடக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், போக்குவரத்தைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சுமார் 50 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை ஆகும். இந்தச் சாலை வழியாகத் தான் உதகையிலிருந்து கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சரக்கு லாரி ஒன்று சமவெளிப் பகுதியிலிருந்து அரிசி ஏற்றி உதகை – கூடலூர் நெடுஞ்சாலையில் நடுவட்டம் தவலமலை அருகே உள்ள மலைப்பாதையில் கவிழ்ந்தது.
இதனால், மூன்று மாநில போக்குவரத்து சுமார் 3 மணி நேரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. லாரியை இயக்கி வந்த ஓட்டுநர் காயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சாலையில் விழுந்துள்ள லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஜேசிபி உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலையில் லாரி கவிழ்ந்ததால் மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பிற்பகலுக்குள் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.