உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு இடம்பெயர முடியாமல் யானைகள் போராடி வருகின்றன.
ஊருக்குள் நுழையும் யானைகளைக் காட்டுக்குள் விரட்டுகிறோம் என வனத்துறை மேற்கொண்டு வரும் பழங்கால கும்கி யானைகள் யுக்தி முதல் நவீன நைட் விஷன் தெர்மல் டிரோன் கேமராக்கள் வரை எதுவுமே பெரிய அளவில் எடுபட்டதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில்தான் யானை – மனித எதிர்கொள்ளல்களை மட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவை நாடியிருக்கிறது வனத்துறை.

நீலகிரி எம்.பி ஆ. ராசா, வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ உள்ளிட்டோரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட இந்தப் புதிய திட்டம் குறித்து வனத்துறையினர், “நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பில் நாடுகாணி வனச்சரகத்திற்குட்பட்ட ஜீன்பூல் மரபியல் தோட்டத்தில் உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Command-and-Control Centre) புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

மனித- வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் 46 பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, 34 செயற்கை நுண்ணறிவு மற்றும் 12 அதிநவீன செயற்கை நுண்ணறிவு என மொத்தம் 46 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வனவிலங்கு நடமாட்டம் அதிக அளவில் உள்ள பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிப்பதால், அவற்றின் நடமாட்டம் மற்றும் மனித- எதிர்கொள்ளல்களுக்கான அபாயம் குறித்து உடனடியாக எச்சரிக்கைகள் உருவாக்கப்படும்.