இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தேவர்சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு அருகில் கடந்த 4 மாதங்களாக நடமாடி வந்த புலி ஒன்று தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வந்தது.
கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு 40-க்கும் அதிகமான கால்நடைகளை வேட்டையாடி வந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தி உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

தேவர் சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் புலியைக் கண்காணிக்க கேமரா மற்றும் உயிருடன் பிடிக்க கூண்டுகளையும் வைத்த வனத்துறையினர், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு வேளையில் அந்தப் பகுதியில் நடமாடி வந்த அந்தப் புலி வனத்துறையினர் வைத்திருந்த கூண்டுக்குள் இன்று அதிகாலை சிக்கியிருக்கிறது.
சுமார் 3 வயதுடைய அந்த ஆண் புலியை முதுமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.