”பா.ம.க-வை, கூட்டணிக்குள் திமுக இணைத்துக்கொள்ளுமா?” என்ற கேள்வியை தி.மு.க முக்கியப் புள்ளிகளிடம் கேட்டோம். அவர்களோ, “ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டுவருவது குறித்து அமைச்சர்கள் பலரும் விரும்புகிறார்கள். ஆனால், ராமதாஸ் வருவதால் கூட்டணிக்குள் எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது என கவனமாக இருக்கிறார் முதல்வர். இதற்கிடையில், ஜனவரி 22-ம் தேதி ராமதாஸ் விவகாரம் குறித்து வி.சி.க தரப்பில் சில முக்கியமான விஷயங்களை முதல்வருக்குக் கடத்தியிருக்கிறார்கள்.

அதன்படி ‘ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு வருவதில் எங்கள் தலைவர் திருமாவுக்கு துளியும் விருப்பமில்லை, ராமதாஸிடம் வாக்குவங்கி இல்லாததால்தான் அன்புமணியை முதலில் அழைத்துக் கொண்டது அ.தி.மு.க. அவரை நாம் கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டால் பா.ம.க எதிர்ப்பில் கூர்மையாக இருக்கும் தலித் வாக்குகள் வெளியே போக வாய்ப்புகள் உண்டு. பா.ம.க, பா.ஜ.க இடம்பெற்றுள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம் என பிரகடனப்படுத்திய எங்களுக்கும் தர்ம சங்கடமான சூழலே ஏற்படும். ஆகையால் நீங்கள் நல்ல முடிவாக எடுக்க வேண்டும்’ என வி.சி.க முன்னணி தலைவர்கள் தூதுவிட்டிருக்கிறார்கள்” என்றனர்.
முதல்வர், என்ன முடிவெடுக்கப் போகிறாரோ?