அன்புமணிக்கு கிடைத்த வாக்குகள் எல்லாம் ஸ்டாலின் எதிர்ப்பு வாக்குகள் என்றே தேர்தல் களத்தைக் கட்டமைத்தனர். அந்த அடிப்படையில், அன்புமணி தி.மு.க-வுக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார். அதன் அடிப்படையில்தான் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கூட்டணியை உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும், இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையை அன்புமணி பா.ஜ.க-விடமிருந்து தொடங்காமல் அ.தி.மு.க-விடம் நேரடியாக பேசியிருக்கிறார். இதன் மூலம் அதிமுக-வுக்கு பா.ம.க கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறது என்ற கருத்தும் எழுந்திருக்கிறது.
அன்புமணியை சந்தித்தப் பிறகு, அன்புமணியுடன் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி ஏற்கெனவே முடிவாகிவிட்டது. இப்போது எங்களுடன் பா.ம.க இணைந்திருக்கிறது. மேலும் சில கட்சிகள் விரைவில் எங்கள் கூட்டணியில் சேர்வார்கள். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி. எங்கள் தொண்டர்கள், பா.ம.க தொண்டர்கள் விரும்பியவாறு இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டணி தீய திமுக-வை ஆட்சியிலிருந்து நீக்கி, மக்களுக்கான ஆட்சி அமைய தீவிரமாக உழைக்கும். 234 தொகுதியிலும் எங்கள் கூட்டணி வெற்றிபெறும். எங்கள் கூட்டணியில் தொகுதியின் எண்ணிக்கை முடிவு செய்துவிட்டோம். விரைவில் அறிவிப்போம்.” என்றார்.
தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி!
தொடர்ந்து பேசிய அன்புமணி, “இன்று அதிமுக தலைமையிலான கூட்டணியில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க இணைந்திருக்கிறது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்திருக்கின்றோம். மக்கள் விரோத, ஊழல் செய்கின்ற, பெண்களுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான, அரசு ஊழியர்கள், மீனவர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், அத்தனை உழைக்கின்ற வர்க்கத்திற்கு எதிரான ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலே இந்தக் கூட்டணையில் இணைந்திருக்கின்றோம். மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்க்கிறோம். சமீபத்தில் கூட 100 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட பொழுது, கிராமத்திலிருந்து நகரம் வரை தி.மு.க மீது மக்கள் மிகுந்த கோபத்தில், ஆத்திரத்தில் இருக்கின்றார்கள். தேர்தல் எப்போது வரும் எனக் காத்திருக்கிறார்கள். உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று, அ.தி.மு.க ஆட்சி அமைக்கும்.” என்றார்,
இதனிடையே இன்று மாலை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.