சென்னை: “தற்காலிக அதிகாரத்துக்காக அம்பேத்கரின் வழியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் நழுவ முடியாது,” என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை, அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை குறித்து அவரது உறவினர் ஆனந்த் டெல்டும்டே எழுதிய ‘iconoclast’ நூல் அறிமுக நிகழ்ச்சி இன்று (டிச.7) நடைபெற்றது. இதில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் பேசியது: “எல்லோரும் அம்பேத்கருக்கு பிறந்தநாள் கொண்டாடுவதன் மூலம் அவரை இந்து தலைவராக அடையாளப்படுத்தி விழுங்க பார்க்கின்றனர். இதைத் தடுப்பது நம் முன் இருக்கும் சவால். தற்காலிமான அதிகாரத்துக்காக அம்பேத்கரின் வழியில் இருந்து நம்மால் நழுவ முடியாது.
4 எம்எல்ஏ-க்கள் போதாது 10 வேண்டும் என்பதில் என்ன வளர்ச்சி இருக்கிறது. தேர்தல், வெற்றி, கூட்டணி என்பதெல்லாம் இரண்டாம் கட்டமானது என்றாலும் அதிலும் தெளிவாக இருக்க வேண்டும். இதற்கான மோதலே நடைபெற்று வருகிறது. அவர்கள் விரும்புவதை நாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்புகளுக்கு எதிர்வினையாற்றவா கட்சி நடத்துகிறோம். அங்கே போனால் அள்ளலாமா, இங்கே போனால் வாரலாமா என எங்களுக்கு எந்த பேராசையும் இல்லை.
என்னை பாமக நிறுவனர் ராமதாஸை பின்பற்றுமாறு ஒருவர் கூறுகிறார். நாங்கள் 100 சதவீதம் அம்பேத்கரை பின்பற்றுகிறவர்கள். எங்களுக்கு அவர் வணிகப் பொருள் கிடையாது. கருத்தியல் அடையாளம். அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர வேண்டும் என்பது விசிகவின் நோக்கங்களுள் ஒன்று. அந்த அதிகாரம் எதற்கு பயன்பட வேண்டும் எனும் தெளிவோடு அனைத்தையும் அணுகுகிறோம். நாங்கள் கருத்தியலில் எவ்வளவு உறுதியோடு இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்த தேவையில்லை” என்று பேசினார்.
நூலாசிரியர் ஆனந்த் டெல்டும்டே பேசும்போது, “அம்பேத்கரை வணிகப் பொருளாகவோ, வழிபாட்டு பொருளாகவோ பயன்படுத்தக் கூடாது என சொல்வதால் என்னை அம்பேத்கருக்கு எதிரானவன் போல் சித்தரிக்கின்றனர். அதை பற்றி எனக்கு கவலையில்லை. தமிழகத்தைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை பட்டியலினத்தவர்கள் ஆதரிக்கக் கூடிய நிலை உருவாகிவிட்டது. மக்களின் உணர்ச்சிகளை பாஜக புரிந்து வைத்துள்ளது. அம்பேத்கர் எனது கடவுள் என்கிறார் பிரதமர் மோடி. இதை நம்பி மக்கள் ஏமாறுகின்றனர். அம்பேத்கரின் செயல்பாடுகள் மூலம் நாம் அவரை புரிந்து கொள்ள வேண்டும். அவர் எதிர்பார்த்த தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும்,” என்றார்.
விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் பேசுகையில், “அம்பேத்கரின் அரசியல், அவர் மீதான விமர்சனம் என பல்வேறு பார்வையில் நூலை ஆனந்த் டெல்டும்டே எழுதியுள்ளார். எனினும், இந்த புத்தகத்தில் விசிகவின் பங்களிப்பு இடம்பெறவில்லை என்பது எனது மனக்குறை. விசிகவை உள்ளடக்கிய அடுத்த பதிப்பை வெளியிட வேண்டும்.” என்று அவர் பேசினர்.
இந்த நிகழ்வில், எம்எல்ஏ-க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, ஆளுர் ஷாநவாஸ், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், மூத்த பத்திரிகையாளர்கள் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், ஆர்.விஜய்சங்கர், விசிக துணை பொதுச்செயலாளர் கவுதம சன்னா, தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம், தகடூர் தமிழ்ச் செல்வன், இளஞ்சேகுவாரா, முதன்மைச் செயலாளர் ஏ.சி.பாவரசு, செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.