“கூட்டணி குறித்த எனது பேச்சை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர்” – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் | They have misrepresented my speech regarding the alliance – Minister KN Nehru

1306829.jpg
Spread the love

திருச்சி: “லால்குடி திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் நான் பேசியதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். தற்போதைய கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக் கொடுக்க மாட்டார்,” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று லால்குடி திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசும்போது, ‘வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் கடுமையாக இருக்கும். ஏற்கெனவே பல கட்சிகள் திமுகவுக்கு எதிராக உள்ளன. புதிதாக ஒரு கட்சியும் (தவெக) வர இருக்கிறது. இதே கூட்டணி தொடருமா என்பதும் சந்தேகம்’ எனப் பேசியிருந்தார். அமைச்சர் நேருவின் பேச்சு கூட்டணியில் பெரும் சலசலப்பை உருவாக்கியதோடு, திமுக தலைமைக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது உருவச்சிலைக்கு திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியது: “நான் லால்குடியில் நேற்று பேசியதை சிலர் தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். என்றைக்கும் தற்போதைய கூட்டணியை, எங்கள் தலைவர் விட்டுக்கொடுக்க மாட்டார்.

நான் பேசியதன் கருத்து என்னவென்றால், 38 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆட்சியமைத்ததை சட்டமன்றத்தில் ஜெயலலிதா பெருமையாக பேசினார். அதைப்போல, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அடுத்த முறையும் தொடர எந்த நிலை வந்தாலும் பாடுபடுவோம் என்ற அர்த்தத்தில் தான் பேசினேன். அதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களோடு சுமூகமாக பழகுகின்றனர். எங்கள் கூட்டணி அருமையாக உள்ளது. எங்கள் கூட்டணி மிகச் சரியான கூட்டணி,” என்றார்.

அதைத் தொடர்ந்து திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட நேரு செய்தியாளர்களிடம் கூறியது: “லால்குடியில் பேசியது சர்ச்சயைாகவில்லை. அதிமுக 38 ஆண்டுகளுக்குப்பிறகு தொடர்ந்து 2வது முறையாக வந்திருப்பதாக கூறியிருந்தனர். தலைவர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் 2வது முறையாக ஆட்சி அமைத்து திமுகவுக்கு பெருமைத் தேடித் தரவேண்டும் என்ற நோக்கத்தில் நான் பேசியிருந்தேன். நான் தோழமை கட்சி வேண்டாம் என்று சொல்லவில்லை.

எதிரணி பலம் இல்லை என்றேன். தோழமைக் கட்சியினர் கூட்டணியை விட்டு போவதாக நான் சொல்ல முடியுமா? நீங்கள் நினைப்பதற்கு நான் தீனியாக முடியாது. நான் அதுமாதிரி சொல்லவில்லை. நான் சொன்ன ஒரே கருத்து 50 ஆண்டுகாலம் கழித்து மீண்டும் திமுக 2ம் முறையாக ஆட்சி தொடர வேண்டும் என்பதே.வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எளிதில் வெற்றி பெறும். முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த அரசு திட்டங்கள் பெண்களிடம் அதிகளவு சென்று சேர்ந்துள்ளது.

பெண்கள் இயற்கையாகவே திமுகவுக்கு வாக்கு அளிக்கின்றனர். நடந்த 6 தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் வெற்றி பெறும். அதற்காக ஆயத்தமாகும் வகையில் உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சியினரை ஊக்குவிப்பதற்காக, எந்த நிலையிலும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன். இன்று கூட, தி இந்து நாளிதழ் நேரு சொன்னது சரிதான் என்று தெரிவித்துள்ளது. இந்த கட்சியில் தலைவர் தான் முடிவு எடுக்க முடியும். நாங்கள் எடுக்க முடியாது.

ஆளுங்கட்சியாக இருக்கும்போது சிலருக்கு நன்மை கிடைக்கும். வாய்ப்பு கிடைக்கதவர்கள் வருத்தப்படுவார்கள். அனைவரையும் அரவணைத்து செல்வது தான் கட்சி. யாரையும் விட்டுவிட்டுப்போவதில்லை. அவர்களை விட்டுப்போய் கட்சியை எப்படி நடத்த முடியும். யார் என்ன சொன்னாலும் அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த பதில் வரலைன்னு நினைக்கிறேன்,” என்றார்.

‘அவளைக் கேளுங்க’ – அடுத்த சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் நேரு: நடிகர் விஜய்யின் தவெக மாநாடுக்கு அனுமதி தரவில்லை. நிறைய கேள்வி எழுப்புவதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்து தெரிவித்துள்ளாரே எனக்கேட்டபோது, ‘அவளைக் கேளுங்க… என்னை ஏன் கேட்குறீங்க” என்றார். லால்குடியில் பேசிய சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் நேரு, தமிழிசையை ஒருமையில் பேசியது அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது.

போகிறப் பக்கமெல்லாம் மைக்கை நீட்டினால் எப்படி? – வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்தபோது, செய்தியாளர்களை அமைச்சர் நேரு சந்தித்தார். அப்போது விஜய்யின் கோட் படம் ரிலீஸ் செய்திக்காக சென்றிருந்த செய்தியாளர்கள் சிலர் சிலை நிகழ்ச்சிக்கு வரஇயலாததால், எல்கேஎஸ் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு வந்த அமைச்சர் நேருவிடம் மீண்டும் லால்குடி தொடர்பாக கேள்வி எழுப்பினர். ஒரே விஷயத்தை அடுத்தடுத்து கேட்டதால் அமைச்சர் நேரு கோபப்பட்டு பேசும் நிலைக்கு ஆளானார். ‘போகிறப் பக்கமெல்லாம் மைக்கை நீட்டினால் அவர் என்னதான் செய்வார்?’ என்று திமுகவினர் எதிர் கேள்வி எழுப்புகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *