முந்துவது யார்?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?’
இன்று நாம் பார்க்கப்போவது தென்காசி மாவட்ட கள நிலவரம்.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி, விவசாயம் , பீடி சுற்றும் தொழிலை முதன்மையாகக் கொண்டும், செங்கல் சூளைகள், மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஒரு முக்கிய வர்த்தக மையமாகவும் திகழ்கிறது. அதோடு அரிசி ஆலைகளும் இங்கும் நிறைய அமைந்துள்ளது.
ஆலங்குளம் தொகுதியில் அதிகளவில் நாடார், சமுதாய மக்கள் வசிக்கின்றனர். அதற்கடுத்து தேவர், யாதவர், பட்டியல் சமூகத்தினர் (SC/ST) மற்றும் இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க வில், போட்டியிட்டு வெற்றி பெற்ற பி.எச்.மனோஜ் பாண்டியன் கடந்த சில வருடங்களாக ஓபிஎஸ் அணியில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் தன்னை திமுகவில் இணைத்து கொள்ளும் போதே தனக்கு சீட் உறுதி செய்யப்பட்டது எனக்கூறி சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்.
அதேசமயம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளராக இருந்த வழக்குரைஞர் சிவ பத்மநாதன் சீட்டுக்காக முயன்று ரேஸில் முந்தி வருகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பனங்காட்டுப்படை கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் ஆலங்குளம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தலில் அவருக்கு ராக்கெட் ராஜா நாடார் சமுதாய வாக்குகளை பெறுவதற்காக தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு, ஹரி நாடார் 37,727 வாக்குகள் பெற்றார். இவரது வாக்குகள் ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை தலைகீழாக மாற்றி போட்டது. இந்த முறை ஹரி நாடார், ராக்கெட் ராஜா யாரும் தொகுதி பக்கம் இப்போது வரை தலை காட்டாமல் இருந்து வருகிறார்கள்.
அ.தி.மு.க.வில் , தென்காசி தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருக்கும் நெல்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி பிரபாகரன், ஆலங்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி ராஜேந்திரன் ஆகியோர் சீட்டுக்காக முட்டி மோதுகிறார்கள். தொகுதியில் இழந்த செல்வாக்கை மீட்டு தொகுதியை கைப்பற்ற வேண்டும் என அதிமுகவும் கடுமையாக வேலை செய்து வருகிறது.
நாம் தமிழர் கட்சி சார்பில் பல் மருத்துவர் பால்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தவெக சார்பில் இளம் தொழில் அதிபர் டிபிவிவி.விபின் சக்கரவர்த்தி கட்சியின் நேர்காணலுக்கு பின்னர் தொகுதியை உறுதி செய்து வேலை செய்து வருகிறார்.

அதே சமயம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் இருமுறை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராக ,நெல்லை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.எஸ் ராமசுப்பு, மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ் காமராஜ் ஆகியோர் சீட்டு கேட்டு வருகிறார்கள்.
NDA கூட்டணி சார்பில் பாஜகவிற்கு ஆலங்குளம் தொகுதி ஒதுக்கப்பட்டால் முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பிஜேபி மாநில இயற்கை வேளாண்மை ஒருங்கிணைப்பாளர் ஷோபனா, ஆகியோர் சீட்டுக்கான வரிசையில் காத்திருக்கிறார்கள்.
மேலும் சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து பிஜேபியில் கட்சியை இணைத்த நடிகர் சரத்குமார் ஆலங்குளம் தொகுதி கேட்டு வரும் சூழ்நிலையில் தனக்கு கடந்த சில வருடங்கள் ஆகியும் கட்சியில் எவ்வித பொறுப்புகளும் வழங்கப்படவில்லை எனக்கூறி , பிஜேபியுடன் அதிருப்தியில் இருப்பதால் அவர் ஆலங்குளம் தொகுதியில் களம் காண இருப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
திமுக, அதிமுக இரண்டு தரப்பிலும் வேட்பாளர்களுக்கான தேர்வில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தலா 5 முறை வென்ற, இரு திராவிடக் கட்சிகளுக்கும் சமமான செல்வாக்குள்ள தொகுதியாகும்.
இப்போதைய சூழலில் இந்த தொகுதியில் அதிமுக திமுக கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவினாலும் உதயசூரியன் கொஞ்சம் கூடுதலாக பிரகாசிக்கிறது.
தென்காசி சட்டமன்றத் தொகுதி, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். விவசாயம், சுற்றுலா, சிறு குறு தொழில்கள் மற்றும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான “தென்னகத்தின் ஸ்பா” என்று அழைக்கப்படும் குற்றாலம் நீர்வீழ்ச்சி, உலகப்புகழ் பெற்ற பராசக்தி அம்மன் கோவில், மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் போன்றவை இத்தொகுதியின் முக்கிய சிறப்புகளாகும்.
விவசாயம்: தென்னை, வாழை, நெல், எலுமிச்சை மற்றும் மாம்பழம் ஆகியவை முக்கிய பயிர்களாகும்.
இத்தொகுதியில் நாடார் சமுதாய மக்கள் சற்று அதிகமாகவும், தேவர், மற்றும் வெள்ளாளர், கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்து வரும் ஒரு பல் சமூக தொகுதியாக இது திகழ்கிறது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பழனி நாடார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றார். இந்த முறை அவருக்கு தொகுதியில் அதிருப்தி நிலவுதால் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
அதே சமயம் திமுக சார்பில் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் ஜெயபாலன் மற்றும் திமுக மாநில இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை மகன் திமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் மருத்துவர். கலைக்கதிர்வனும் சீட்டுக்கு மல்லுக்கட்டி வருகிறார்கள்.
இருவருமே தென்காசி தொகுதிக்கான சீட்டுக்காக தலைமைக் கழகத்தில் முட்டி மோதிகிறார்கள்.
இத்தொகுதியில் அதிமுக சார்பில் மாவட்டச் செயலாக இருக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் மற்றும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை மகன் அதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் கிருஷ்ணராஜா ஆகியோர்க்கிடையே சீட்டை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இருப்பினும் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் சீட்டுக்கான ரேஸில் முந்தி வருகிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் புஷ்பலதா பால்பாண்டியன் களம் காண்கின்றார்.
தவெக சார்பில் ராஜ பிரகாஷ் சீட்டை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.
அதே சமயம் தென்காசி சட்டமன்ற கூட்டணி கட்சி காங்கிரஸ்-க்கு ஒதுக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் தென்காசி புதிய மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்வராஜ், இருமுறை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராகவும் , நெல்லை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.எஸ் ராமசுப்பு, மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ் காமராஜ், சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், ஆகியோர் சீட்டுக்கான வரிசையில் காத்திருக்கிறார்கள்.
இத்தொகுதியில் 50-50 போட்டி நிலவி வருவதால் இத்தொகுதி Close Fight Constituency என்ற சூழல் நிலவி வருகிறது. வேட்பாளர்கள் தேர்வினை பொறுத்து வெற்றி வாய்ப்பு மாறுபட வாய்ப்புள்ளது.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க பகுதியாகும். விவசாயம் இப்பகுதியில் நெல், தென்னை, வாழை, மற்றும் காய்கறி சாகுபடி முக்கிய விவசாயத் தொழிலாக உள்ளது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள், பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஜவுளி மற்றும் வர்த்தகம் கடையநல்லூர் நகரில் துணிக்கடைகள் மற்றும் சிறு வணிகங்கள் அதிகம். சில பகுதிகளில் விசைத்தறித் தொழில்கள் நடைபெறுகின்றன.
இத்தொகுதியில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள், தேவர், மற்றும் நாடார் யாதவர், நாயக்கர், மூப்பனார், கிறித்தவர்கள் எனப் பலதரப்பட்ட சமூகத்தினர் வாழும் பன்முகத்தன்மை கொண்ட தொகுதியாகும்.
இத்தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சார்ந்த கே.ஏ.எம் முகமது அபுபக்கரை எதிர்த்து, கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியனின் மகன் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா அதிமுக சார்பில் வெற்றி பெற்றார்.

அதேசமயம் இந்த முறை கடையநல்லூர் தொகுதியில் நேரடியாகவே திமுக களம் காண இருக்கிறது என்கிறார்கள் அக்கட்சியினர். திமுக சார்பில் தென்காசி மாவட்ட துணைச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காசிராஜன் ஆகியோர் சீட்டுக்கான வரிசையில் முட்டி வருகிறார்கள்.
திமுக கூட்டணியில் ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைப்பு செயலாளர் ராம் மோகன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வராஜ், ஐஎன்டியுசி. தேசிய பொதுச் செயலாளர் அமீர்கான், எஸ்கேடிபி.காமராஜ், ஆகியோர் சீட்டுக்கான வரிசையில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முட்டி மோதிகிறார்கள்.
அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா மீண்டும் போட்டியிடும் முனைப்பில் களத்தில் வேகம் காட்ட தொடங்கியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் காயல்பட்டினத்தை சேர்ந்த வழக்குரைனர் அபூபக்கர் சித்திக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தவெக சார்பில் தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் நியாஸ், மாவட்ட இணை செயலாளர் முத்தையா, மற்றும் வாசுதேவி, ஆகியோர் சீட்டுக்கான முயற்சியில் முழு வீச்சில் இறங்கி உள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் அமுமுக தன்னிச்சையாக போட்டியிட்டு அய்யாதுரை பாண்டியன் கணிசமான அளவில் 34,216 வாக்குகள் பெற்ற போது கூட அதிமுக இத்தொகுதியில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை அதிமுகவுடன் அமுமுக கூட்டணி வைத்துள்ளதால் இத்தொகுதி அதிமுக வசம் இருக்க அதிக வாய்ப்புள்ளது.
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வரலாற்றில் 6 முறை வென்று அதிமுக கோட்டையாக உள்ளது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை துளிர்க்க வாய்ப்புள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்றத் தொகுதி, விவசாயம் மற்றும் பீடி சுற்றும் தொழிலை முதன்மையாகக் கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர், ஒண்டிவீரன், வெண்ணி காலாடி ஆகியோர் வாழ்ந்த மற்றும் போரிட்ட நெல்கட்டும் செவல் பகுதிகளை கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாகும்.
இங்கு நெல் விவசாயம், கைத்தறி தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, மேலும் அர்த்தநாரீஸ்வரர் கோயில் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் நினைவிடங்கள் சுற்றுலாத் தலங்களாக விளங்குகிறது.
இத்தொகுதியில் ஆதி திராவிடர் சமூகத்தினர் கணிசமாக வாழ்ந்தாலும், முக்குலத்தோர் (மறவர்), தேவேந்திர குல வேளாளர், நாடார், யாதவர் போன்ற பல்வேறு சமூகத்தினர் இணைந்து வாழும் பகுதியாக இது உள்ளது.
இத்தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் .இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு நோ சொல்லிவிட்டு திமுகவே நேரடியாக களம் காண்கிறது என்கிறார்கள்.
திமுக சார்பில் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தென்காசி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் ஆகியோர் சீட்டுக்கான வரிசையில் வியர்க்க விறுவிறுக்க நிற்கிறார்கள்.
அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியான பாஜகவிற்கு வாசுதேவ நல்லூர் தொகுதி ஒதுக்கப்படும் என முழுமையாக நம்பப்படுகிறது. இந்த நிலையில் தென்காசி பாஜக மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே வாசுதேவ நல்லூர் சட்டமன்ற தொகுதியை குறிவைத்து தொடர்ந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதேசமயம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனுக்கு வாசுதேவநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் அவர் இரட்டை இலை சின்னத்தில் நிற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இத்தொகுதியில் தவெக சார்பில் அதிமுகவில் இருந்து வெளியேறி ஓபிஎஸ் அணியில் இணைந்து சிறிது காலமாக செயல்படாமல் வந்திருந்த நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்ட வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் சீட்டை உறுதி செய்து களம் காண தயாராக இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற தென்காசி (தனி ) பாராளுமன்ற தேர்தலில் 1,30,335 வாக்குகள் பெற்ற இசை மதிவாணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களத்தில் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்.
இத்தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஆனந்தன் அய்யாசாமிக்கு ஒதுக்கப்பட்டால் தவெக சார்பில் போட்டியிடும் மனோகரனுக்கும் இடையே நேருக்கு நேர் சகோதர போட்டி ஏற்படும்.
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி பொருத்தவரை ஒரே கட்சி Strong hold என்ற நிலை இல்லாமல் ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி கட்சி ,வேட்பாளர் சட்டமன்ற தொகுதி பிரச்சனைகள் ஆகியவற்றைப் பொறுத்து இத்தொகுதியில் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
இப்போதுள்ள சூழலில் திமுக- அதிமுக கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுத்தை காண முடிகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கரநாராயண சுவாமி கோயில் மற்றும் துடிப்பான விசைத்தறி நெசவுத் தொழிலுக்கு புகழ்பெற்றது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, மற்றும் புடவை, துண்டு உற்பத்தி ஆகியவை இப்பகுதியின் பிரதான தொழிலாகும். உலகப் புகழ்பெற்ற 12 நாள் ஆடித்தபசு திருவிழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
விவசாயம், நெசவு என இருவேறு முக்கியத் தொழில்களைத் தன்னகத்தே கொண்டு, ஆன்மீகச் சிறப்பும் வாய்ந்த தொகுதியாக சங்கரன்கோவில் விளங்குகிறது.
இங்கு அதிகளவில் பட்டியல் சமூகத்தினர் (குறிப்பாக தேவேந்திர குல வேளாளர்) வசிக்கின்றனர், மேலும் முக்குலத்தோர் (தேவர்), யாதவர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.

அதிமுகவின் கோட்டையாக இருந்த சங்கரன் கோவிலில் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வழக்கறிஞர் ராஜா வெற்றி பெற்றார். திமுக சார்பில் சங்கரன்கோவில் தொகுதியிலே மீண்டும் போட்டிடும் முனைப்பில் வேகம் காட்ட தொடங்கி உள்ளார்.
அதேசமயம் 2012ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் வெற்றி பெற்று தற்போது திமுகவின் கடந்த சில வருடங்களாக பயணித்து வரும் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துசெல்வி சீட்டுக்கு மல்லு கட்டுகிறார்.
அதிமுக சார்பில் வி.எம். ராஜலட்சுமி 2016 சட்டமன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இழந்த ஆதிக்கத்தை மீண்டும் மீட்டெடுக்க சங்கரன்கோவில் தொகுதியில் களம் காண இருக்கிறார்.
தவெக சார்பில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அமுதா ராணி சீட் பெற கடுமையாக முயற்சிக்கிறார். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை சங்கரன்கோவிலில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியக்கூடிய கவிதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளார்.
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வரலாற்றில் அதிமுக 9 முறை வெற்றி பெற்றாலும் இப்போதைய சூழ்நிலையில் கதிரவனே பிரகாசிக்கிறது.!