தஞ்சாவூர் மஹாராஜா திருமண மஹாலில் அமைச்சர் அன்பில் மகேஸ் சகோதரி மகள் ஓவியா – மனோஜ் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, கிருத்திகா, சபரீசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்காக மண்டபத்தின் உள்பகுதி அரண்மனை போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஸ்டாலின் கலந்து கொண்டதால் போலீஸார் கடும் கெடுபிடி காட்டினர். இதையடுத்து வரவேற்று பேசிய உதயநிதி, `இது மூன்று தலைமுறை நட்பு” என்றார். நன்றி தெரிவித்து பேசிய அன்பில் மகேஸ், `தமிழ்நாட்டின் முதல்வரும், பெரியம்மாவும் தாய், தந்தை ஸ்தானத்தில் இருந்து எங்களை வழி நடத்துகின்றனர்’ என்ற போது துர்கா ஸ்டாலின் கண்கள் கலங்கின.

இதைதொடர்ந்து துர்கா, `மாலையை எடுத்து ஸ்டாலின் கையில் கொடுத்து மணமக்களிடம் கொடுக்க சொன்னார். ஸ்டாலின் மணமகனிடம் மாலையை கொடுக்க மணமகள் கழுத்தில் போடுங்கனு துர்கா சொல்ல மணமக்கள் மாலை போட்டுக் கொண்டனர்.
இதே போல், வணங்கியபடி துர்கா தாலியை எடுத்து ஸ்டாலினிடம் கொடுக்க அவர் மணமகனிடம் கொடுத்தார். மணமகன் தாலி கட்டிய போது மாங்கல்யத்தை துர்கா பிடித்து கொண்டார். ஸ்டாலினும், துர்காவும் உற்சாகமாக திருமணத்தை நடத்தி வைத்தனர்.
மணமகள் ஓவியா காதில் ஏதோ சொல்லி விட்டு வெடித்து சிரித்தார் துர்கா. பின்னர் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அப்போது உதயநிதி கிருத்திகாவை அழைத்து தன் அருகில் நிற்க வைத்து கொண்டார். உதயநிதியும் சபரீசனும் சிரித்தபடி பேசிக்கொண்டே நின்றனர்.