டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
உச்ச நீதி மன்றத்தில் வழக்கு
தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படடது. அமலாக்கத்துறை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரியும் உச்சநீதி மன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இது தொடர்பாக கடந்த 3 நாட்களாக காரசாரமாக உச்சநீதி மன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஜாமீன்
இந்த நிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) வழக்கு விசாரணை தொடர்ந்தது. அப்போது வஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜுன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபங்கர் தத்தா அடங்கிய அமர்வு, மக்களவைத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்ற காரணத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
50 நாட்கள் சிறை
இதனால் 50 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிறையில் இருந்து வீடு திரும்புகிறார். இதனால் ஆம்ஆத்மி தொண்டர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் வருகையை எதிர்பார்த்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது முதலே திகார் சிறை வாசல் முன்பு தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.
சிறையில் இருந்து வந்தார்
மாலையில் தொண்டர்களுடன் மந்திரி ஆதிஷியும் காத்திருந்தார். பின்னர் இரவு 7 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை கட்சி தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர். பின்னர் கெஜ்ரிவால் காரில் நின்ற படி தொண்டர்களிடம் உற்சாகமாக பேசினார். அப்போது அவர் கூறும்போது, “உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எனக்கு ஆசிர்வாதம் கொடுத்தீர்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், அவர்களால் தான் நான் உங்கள் முன்னால் இருக்கிறேன். சர்வாதிகாரத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்…” என்றார்.
இதைத்தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் காரில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேர்தலில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனைகள்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு விதித்து உள்ள நிபந்தனைகள் விபரம் வருமாறு:&
அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்பாக ரூ.50 ஆயிரத்துக்கான தனிநபர் பத்திரம் வழங்க வேண்டும்.ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜாமீனில் இருக்கும் காலங்களில் முதல்வர் அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ செல்லக்கூடாது.
அவர் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்ளலாம்.துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி இல்லாமல் கெஜ்ரிவால் எந்த அலுவலக கோப்புகளிலும் கையெழுத்திடக்கூடாது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு பற்றி பேசவோ அல்லது தன்மீதான குற்றச்சாட்டு பற்றி விவாதிக்கவோ கூடாது.
வழக்கில் தொடர்புடைய எந்த சாட்சிகளுடனும் தொடர்பு கொள்ளக் கூடாது.
இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.