கெட்டுப்போன உணவுகளை வழங்கினால் ஹோட்டலுக்கு சீல் வைத்து உரிமம் ரத்து: அதிகாரி எச்சரிக்கை | Hotel Sealed and License Revoked for Serving Spoiled Food: Officials Warn

1300632.jpg
Spread the love

சென்னை: கெட்டுப்போன உணவுகள் வழங்கப்பட்டால் ஹோட்டலுக்கு சீல் வைத்து, அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னையில் உள்ள பெரிய உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை தி. நகரில் நேற்று நடைபெற்றது. இதற்கு சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமை வகித்தார். இதில் பெரிய உணவகங்களின் உரிமையாளர்கள், சமையல் கலைஞர்கள் பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி தொடர்பாக செய்தியாளர்களிடம் சதீஷ்குமார் கூறியதாவது: சமீபத்தில் வடமாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சி கொண்டு வரப்பட்டு, அதனை உணவுபாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஆட்டிறைச்சி ரூ.900 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சியோ ரூ.500-க்கு கிடைக்கிறது.

ரயிலில் வந்த இறைச்சி: இதனால் இரட்டை லாபம் கிடைப்பதால் ரயிலில் பெட்டிகளில் பாதுகாப்பற்ற முறையில் இறைச்சியை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். மேலும் ஆட்டிறைச்சி கெட்டுப்போகாமல் இருக்க அதன் மேல் நேரடியாக கெமிக்கலை பயன்படுத்தாமல், பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகளின் மீது கெமிக்கலை செலுத்தி, அதனை ஆட்டிறைச்சியுடன் சேர்த்து பார்சல் செய்து விடுகின்றனர். அதனால் நீண்ட நேரம் இறைச்சி கெட்டுப்போகாமல் கொண்டு வரப்படுகிறது.

இந்த கெமிக்கல் கலந்த உணவை உண்பதால் வயிற்று போக்கு, வாய்ப் புண், வாந்தி, வயிற்று எரிச்சல், ஒவ்வாமை, தலை சுற்றல் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல உண்ணும் இறைச்சியில் கெமிக்கல் கலக்கப்பட்டு உள்ளதா என்பதை கண்டறிவதும் கடினம். எனவே சமைக்கும் முன்பே இறைச்சியின் தன்மையை வைத்து கெமிக்கல் கலந்தது கண்டறியப்பட்டால், அவற்றை அகற்றிவிடலாம். இது போன்ற கெட்டுப்போன இறைச்சிகள் பெரும்பாலும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு தான் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இவற்றை யார் அனுப்புகின்றனர், யாருக்கு அனுப்புகிறார்கள் போன்ற தகவல்கள் கிடைப்பதில்லை. எனவே கெட்டுப்போன உணவுகள் உணவகங்களில் வழங்கப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, உரிய விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில், ஹோட்டலுக்கு சீல் வைத்து, அதன் உரிமம் ரத்துசெய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *