புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணப் பரிவர்த்தனை விசாரணையில் சட்ட விதிகளின்படி மத்திய அரசின் அனுமதி பெறுவது அவசியமாகும். அதன் பேரில் சமீபத்தில் கேஜரிவாலுக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லி துணைநிலை ஆளுநர் மூலம் இதற்கான கோப்பை மத்திய உள்துறையின் ஒப்புதல் கோரி அமலாக்கத் துறை அனுப்பியிருந்தது. கேஜரிவால் மட்டுமின்றி அவரது அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையைத் தொடரவும் மத்திய உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.
கலால் கொள்கை விவகாரத்துடன் தொடர்புடைய பணப் பரிவர்த்தனை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவால் ஏற்கெனவே அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற அனுமதியுடன் ஜாமீனில் உள்ளார்.
தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5}ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கேஜரிவாலுக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால் இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வழக்கில் கேஜரிவால், மனீஷ் சிசோடியா உள்ளிட்டோருக்கு எதிராக ஏற்கெனவே கடந்த ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. விசாரணைக்கு இருவரும் ஒத்துழைக்கவில்லை என்று கூறி முதலில் சிசோடியாவையும் பின்னர் கேஜரிவாலையும் அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்த வழக்கில் ஆரம்பத்தில் கேஜரிவாலை அவரது தனிப்பட்ட அரசியல் தலைவர் மற்றும் தனிநபர் தகுதி அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவராக அமலாக்கத்துறை சேர்த்திருந்தது.
ஆனால், சட்ட விதிகளின்படி அரசுப் பதவியில் இருந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி அவசியம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்தது.
2021}22 ஆண்டில் தில்லி அரசின் கலால் கொள்கையை வகுத்துச்செயல்படுத்தும் நடவடிக்கையில் முறைகேடு நடந்ததாக 2022, ஆக. 17}இல் சிபிஐ பதிவு செய்த வழக்கின் தொடர்ச்சியாக பல கோடி ரூபாய் மதிப்பிலான பணப்பரிவர்த்தனை தொடர்புடைய இந்த விவகாரத்தை அமலாக்கத்துறையும் தனியாக விசாரித்து வருகிறது.