இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு ஜஸ்பிரித் பும்ராவுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: பார்டர் – கவாஸ்கர் தொடரில் தோற்றால் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கௌதம் கம்பீர் நீக்கப்படுவாரா?
கடினமாக இருக்கும்
பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு மிகவும் கடினமானதாக இருக்கும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா அணியில் இல்லாத பட்சத்தில், இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சு மற்றும் கேப்டன்சி என இரண்டு பொறுப்புகளையும் சேர்த்து கவனித்து கொள்ள வேண்டியிருக்கும். கேப்டன் பொறுப்பு அவருக்கு கடினமானதாக இருக்கும். அவர் எத்தனை ஓவர்கள் பந்துவீசப் போகிறார்? அவர் அதிக ஓவர்கள் வீசுவாரா? போன்றவற்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்க: தொடக்க ஆட்டக்காரர் இவர்தான்; முடிவுக்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் தேடல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடாத பட்சத்தில், அணியின் துணைக் கேப்டனான ஜஸ்பிரித் பும்ரா அணியைக் கேப்டனாக வழிநடத்துவார். பும்ரா மிகவும் அனுபவமிக்க வீரர். கடினமான காலங்களில் பும்ரா சிறப்பாக செயல்பட்டுள்ளார். வேகப் பந்துவீச்சாளர்களும் அவரது தலைமையில் சிறப்பாக வழிநடத்தப்படுவார்கள். டி20 , ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா அணியின் மிக முக்கியமான வீரர் என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களால், கேப்டன் ரோஹித் சர்மாவால் விளையாட முடியாது எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.