மாநில அரசின் மசோதாக்களை நிறைவேற்ற தாமதம் செய்வதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் கேரளம், மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரள மற்றும் மேற்கு வங்க ஆளுநர்கள் மாநில அரசின் மசோதாக்களை நிறைவேற்றுவதில் கால தாமதம் செய்வதாகக் கூறி தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைப்பெற்றது.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் அந்தந்த ஆளுநர் அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
மாநிலங்களில் இருந்து கூட்டறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும், 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டி மேற்கு வங்க அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தது.