கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகியவை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
சி.பி.எம் கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் மாநிலம் முழுவதும் பரவலாக செல்வாக்கு உள்ளது. சி.பி.எம் தற்போது ஆட்சியில் உள்ளது, காங்கிரஸ் ஏற்கனவே ஆண்ட கட்சியாக உள்ளது. அதே சமயம் பா.ஜ.க இப்போதுதான் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது.
திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பா.ஜ.க அமைப்பு ரீதியாக பலம்பெற்று வருகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேமம் சட்டசபை தொகுதியில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று ஓ.ராஜகோபால் எம்.எல்.ஏ-வாக இருந்தார்.
கடந்த டிசம்பரில் நடந்து முடிந்த கேரள உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜ.க அதிக வார்டுகளில் வென்றது. பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராக உள்ளார். பா.ஜ.க-வுக்கு அடித்தளம் உள்ளதால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிட விரும்பி அக்கட்சி தலைவர்கள் காய் நகர்த்துகின்றனர்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் திருவனந்தபுரம், வர்க்கலா, ஆற்றிங்கல், சிறையின்கீழ், நெடுமங்காடு, வாமனபுரம், களக்கூட்டம், வட்டியூர்காவு, நேமம், அருவிக்கரை, காட்டாக்கடை, கோவளம், நெய்யாற்றின்கரை, பாறசாலை ஆகிய 14 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இதில் திருவனந்தபுரம், நேமம், களக்கூட்டம் சட்டசபை தொகுதிகள் முழுவதும் திருவனந்தபுரம் மாநகராட்சி வார்டுகளை மட்டுமே உள்ளடக்கியதாகும். வட்டியூர்காவு உள்ளிட்ட சில தொகுதிகளில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் சில வார்டுகள் வருகின்றன. எனவே, மாநகராட்சியை உள்ளடக்கிய தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க தலைவர்கள் முட்டிமோதுகின்றனர்.