கேரளா: பாலியல் கொடுமைக்கு ஆளான நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தி வீடியோ; 3 பேரைக் கைதுசெய்த போலீஸ்

Spread the love

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்ட நிலையில், பல்சர் சுனி என்ற சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், சலீம், பிரதீப் ஆகிய ஆறு பேருக்கும் தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது, எர்ணாகுளம் பிரின்சிபல் செசன்ஸ் கோர்ட். இதற்கிடையில் சிறைக்குச் செல்லும் முன் நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தும்விதமாக பெயரைக்கூறி வீடியோ வெளியிட்டார் இரண்டாவது குற்றவாளியான மார்ட்டின் ஆண்டனி. பாலியல் வன்கொடுமை நடைபெறவில்லை, அது கட்டுக்கதை என அந்த வீடியோவில் கூறியிருந்தார். விய்யூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் மார்ட்டின் ஆண்டனி மீது திருச்சூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை மன வருத்ததுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

சுனில்குமார் என்ற பல்சர் சுனி

இந்த நிலையில் நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக மார்ட்டின் ஆண்டனி வெளியிட்ட வீடியோக்களை பணம் வாங்கிக்கொண்டு பகிர்ந்ததாக மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எர்ணாகுளம், திருச்சூர், ஆலப்புழா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், சமூக வலைதங்கள் உள்ளிட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட இணையதள பக்கங்களில் அந்த வீடியோக்களை மூவரும்  பகிர்ந்ததாகவும் அந்த வீடியோக்களை நீக்கம் செய்துள்ளதாகவும் திருச்சூர் சிட்டி போலீஸ் கமிஷனர் நகுல் ராஜேந்திர தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

கூட்டு பாலியல் வன்முறை

இந்த நிலையில் நடிகை பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என போலீஸ் டி.ஜி.பி பரிந்துரை செய்துள்ளார். டி.ஜி.பி பரிந்துரையை அரசு அங்கீகரித்துள்ளது. நடிகைக்கு எதிராக நடந்த சதித்திட்டத்தை நிரூபிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் தோல்வியடைந்ததாக கூறப்பட்ட நிலையில் மேல் முறையீடு செய்யப்படும் என அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *