கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிஜில். மைக் செட் ஆப்பரேட்டர் வேலை செய்து வந்தார். இவருக்கும் கிருஷ்ணபிரியா என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒரு வயதான இகான் என்ற மகன் இருந்தான். கடந்த 16-ம் தேதி மாலை குழந்தை இகான் வாயில் நுரை வெளிப்பட்ட நிலையில் மயங்கினான். இதை அடுத்து பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இகான் மரணமடைந்தான்.
இகானின் தந்தை சிஜில் மாலை நேரத்தில் பிஸ்கட் கொடுத்த பிறகுதான் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். மீதமுள்ள பிஸ்கட்டை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அதில் விஷத்தன்மை இல்லை என்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தையின் வயிற்றில் படுகாயத்தால் சிதைவு ஏற்பட்டு ரத்தக்கசிவு காரணமாக குழந்தை மரணமடைந்துள்ளதாகப் பிரேதப் பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்தது. குழந்தையின் வயிற்றில் யார் தாக்கியிருப்பார்கள் என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

அதில், குழந்தையின் பெற்றோருக்கு இடையே அவ்வப்போது பிரச்னை ஏற்படுவது வழக்கம் என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையின் தாயிடமும், தந்தையிடமும் தனித்தனியாகவும், சேர்த்து வைத்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.